சு.க கிளர்ந்தெழுந்த ஒவ்வொரு தருணத்திலும் மைத்திரியே பின்னணியில் செயற்பட்டுள்ளார்: சரத் விஜேசூரிய

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கிளர்ந்தெழுந்த ஒவ்வொரு தருணத்திலும் அதற்குப் பின்னணியில் சிறிசேனவே இருந்தார். அவரின் பண்பற்ற செயற்பாட்டால் தன்னை நாகரிகமற்ற ஒருவராக தற்போது நிரூபித்திருக்கிறாரென பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு புதிய நகரமண்டபத்தில் மாதுளுவாவே சோபித தேரரின் நினைவுநாள் அனுஷ்டிக்கும் நிகழ்வொன்று நடைபெற்றது. இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் போராடிய வண.மாதுளுவாவே சோபித தேரர் இன்று உயிருடன் இருந்திருந்தால், தான் ஆதரித்துப் பிரசாரம் செய்த பொதுவேட்பாளரின் நடத்தையைக்கண்டு பெரும் விரக்தியடைந்திருப்பார்.

அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஆலோசகராக சிறிலால் லக்திலகவை  நியமித்த தினத்தில், அவரின்  அநாகரிகமான நடத்தையின் முதல் அறிகுறிகளை சோபித தேதேரர் அவதானித்தார். அதன்போது என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட தேரர், ஜனாதிபதியின் செயலை நன்றி கெட்ட வேலை என்று வர்ணித்தார்.

2015 ஜனவரிக்குப் பின்னர் இந்த நன்றி கெட்ட குணத்தின் வெளிப்பாடுகளை பலதடவைகள் எம்மால் காணக்கூடியதாக இருந்தது. ஒக்டோபர் 26  ஆம் திகதி ஜனாதிபதி செய்த காரியம் திடீரென நடந்தேறியதல்ல. அது நன்கு திட்டமிட்டே அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் கொண்டு வருவாரென்ற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் வாக்களித்த சகலரினதும் அபிலாசைகளுக்கு முரணாக அமைந்த இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கான சூழ்நிலையை  சிறிசேன மிகவும் ஆறுதலாக தயார் செய்தார் என்பதை இப்போது புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

முன்னைய ஆட்சியுடன் தொடர்புடைய ஊழல்காரர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முயற்சித்தபோது அதற்கு குறுக்கே நின்றவர் ஜனாதிபதி சிறிசேனவே.

நிதிக்குற்றங்கள் விசாரணைப்பிரிவின் சட்டபூர்வத்தன்மை குறித்து முதலில் சவால் விட்ட மைத்திரி, சுசில் பிரேம ஜெயந்தவை அவருக்கு எதிரான ஊழல் விசாரணையொன்றை நிறுத்துவதற்கு தலையீடு செய்தார்.

ஆனால் இன்று அதே பிரேம ஜெயந்த, நாட்டின் நீதியமைச்சராக சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்திருக்கிறார்.” என சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்