அமெரிக்காவின் வரி விதிப்புகள் தளர்த்தப்படும்: கனடா நம்பிக்கை

அமெரிக்காவின் உருக்கு மற்றும் அலுமினியம் மீது விதிக்கப்பட்டுள்ள வரிக் கட்டணங்கள் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார்.

அதன்படி, இவ்விடயம் தொடர்பாக ஆர்ஜன்டீனாவில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின் போது தீர்வு கிட்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமாதான மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக பரிஸ் விஜயம் செய்திருந்த கனேடிய பிரதமர், அங்கு அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து பரிஸில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கனேடியர்களுக்கு தொடர்ந்து பெரும் சிக்கலை ஏற்படுத்திவரும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான தீர்வை கட்டணம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதிக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதன் மூலம், ஆர்ஜன்டீனாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஜி-20 மாநாட்டில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என எதிர்பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்