பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க பெயர் கூவி வாக்கெடுப்பை நடத்துக! – சபாநாயகர், கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து வாக்கெடுப்பை நடத்துங்கள்.”

– இவ்வாறு நேற்று மாலை தன்னைச் சந்தித்த சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார்.

இந்தச் சந்திப்பு தொடரில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றிரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்தக் கலந்துரையாடலின்போது நாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைமை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலம் தங்கள் வசம் இருப்பதாக இதன்போது தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள், அதனை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் தான் அரசமைப்பின் பிரகாரம் செயற்படுவதாகவும், அதற்குரிய கௌரவத்தை அளிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து தங்களது பெரும்பான்மைப் பலத்தை உரிய முறையில் நிரூபிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் புதிய அரசுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் முதலாவது வாசகத்தை நீக்குதல் மற்றும் மீண்டும் நாளை அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வாக்கெடுப்பை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து மேற்கொள்ளுமாறும் கலந்துரையாடலுக்கு வருகை தந்த கட்சித் தலைவர்கள் குழுவினரிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அதற்கமைய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்குமாறு தெரிவித்த ஜனாதிபதி, அவ்விடயம் தொடர்பில் அரசமைப்பின் பிரகாரம் செயற்பட முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறே நாடாளுமன்றத்தினுள் அமைதி நிலையை உறுதி செய்து, ஜனநாயகம் மற்றும் நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாக செயற்படுமாறும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தரப்பினரிடமும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார் – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்