குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் இடமாற்றம் ரத்து! – ஜனாதிபதி உத்தரவு

குற்றப்புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரியான நிசாந்த சில்வாவின் இடமாற்றம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கமைய பொலிஸ் ஆணைக்குழு இதனை ரத்து செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை, பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான பல வழக்குகளில் நிசாந்த சில்வா விசாரணை அதிகாரியாக செயற்பட்டுள்ளார். குறிப்பாக சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை போன்றன இவற்றில் சிலவாகும்.

குறிப்பாக முழு நாட்டையும் உலுக்கிய புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைவழக்கின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க முன்நின்று செயற்பட்ட விசாரணை அதிகாரியும் இவரே.

எனினும், அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவரை நீர்கொழும்பு பொலிஸ்பிரிவிற்கு இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது, கடந்த பல வழக்குகளை கிடப்பில் போடும் அல்லது விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கம் கொண்டதென சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர்.

இதேவேளை, தமது இடமாற்றத்திற்கெதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் நிசாந்த சில்வா மேன்முறையீடும் செய்திருந்தார்.  இந்நிலையில், ஜனாதிபதி இந்த இடமாற்றத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்