வழக்கு விசாரணையில் மல்லையாவுக்கு பின்னடைவு!

லண்டனில் ரீஜன்பார்க் என்ற இடத்தில் விஜயமல்லையாவுக்கு பிரமாண்ட பங்களா வீடு உள்ளது. இந்த பங்காள விஜயமல்லையா மற்றும் அவரது தாயார், மகன் பெயரில் நடத்தப்படும் நிறுவனம் மூலம் வாங்கப்பட்டுள்ளது.

இதை 2005 ஆம் ஆண்டு வாங்கி 2012 ஆம் ஆண்டு இந்த வீட்டை சுவிஸ் வங்கியான யு.பி.எஸ். வங்கியில் அடமானம் வைத்து ரூ.160 கோடி கடன் பெற்றனர். 5 ஆண்டுகளில் அதை திருப்பி செலுத்துவதாக நிபந்தனையுடன் கடன் வாங்கினார்கள். ஆனால் பணத்தையும் திருப்பி செலுத்தவில்லை. வட்டியும் கட்டவில்லை.எனவே வீட்டை கைப்பற்றும் வகையில் சுவிஸ் வங்கி இங்கிலாந்து நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு ராயல் நீதிமன்றில் நீதிபதி மாஸ்டர்மாஸ் முன்னிலையில் நடந்து வருகிறது. நேற்று இதன் விசாரணை நடந்தது. அப்போது விஜய மல்லையாவின் வக்கீல்கள் வங்கி எடுத்த நடவடிக்கை சட்ட விரோதமானது. வீட்டை கைப்பற்றுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று வாதாடினார்கள்.

ஏற்கனவே நீதிமன்றம் வருகிற ஜனவரி மாதம் 4 ஆம் திகதிக்குள் முழு தொகையையும் கட்ட வேண்டும். இல்லை என்றால் வீட்டை வங்கியிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியிருந்தது. இந்த நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று வக்கீல்கள் வாதாடினார்கள்.

அதையும் நீதிபதி ஏற்கவில்லை.குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை செலுத்துவதற்கான உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, இந்த கடன் நடைமுறையில் விஜய மல்லையா நிறுவனம் பல விதிமுறைகளை மீறி இருக்கிறது. அவர்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று நீதிபதி கூறினார்.

வழக்கு செலவுக்காக குறிப்பிட்ட பணம் தர வேண்டும் என்று வங்கி கேட்டிருந்தது. அதன்படி 88 ஆயிரம் பவுண்டு பணத்தை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்த விவகாரத்தை நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

வழக்கு விசாரணையின் போக்கு விஜயமல்லையாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் விஜய மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும்படி மத்திய அரசு கேட்டுள்ள வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்