பிரபாகரன் தமிழர்களின் இதயத்தில் எந்த ஆட்சியாளரும் அடக்க முடியாது! சீறுகின்றார் சிவாஜி

 

தமிழர்களின் இதயத்திலே இருந்து கொண்டிருக்கும் தலைவர் பிரபாகரனை எந்த ஆட்சியாளர்களாலும் அடக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ முடியாது என்பதை அடக்குமுறையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய (27) மாவீரர் நாளில்; மாவீரர்களை நினைவு கூருவதற்கு பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

 

தமிழினத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனுடைய 64 ஆவது பிறந்த தின நிகழ்வை வல்வெட்டித்துறை ஆலடியிலுள்ள அவருடைய இல்லத்திலே கொண்டாடுவதற்கு முயற்சியெடுத்திருந்தோம். இதற்கமைய அந்தக் காணியைத் துப்பரவு செய்வதற்கு நான்கு தொழிலாழியை அனுப்பியிருந்த பொழுது அவர்களைக் கடமை செய்ய விடாது தடுத்து அவர்களது அடையாள அட்டைகளையும் பறித்து அங்கிருந்து செல்லுமாறு அவர்களை விரட்டியனுப்பியிருந்தனர்.

அங்கு இரவு முதல் பொலிஸார் குவிக்கப்பட்டு இந்த நிகழ்வைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததற்கமையவே இந்த நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக காலையில் நேரம் செல்லச் செல்ல தொடர்ந்தும் பொலிஸார் அப் பகுயில் அதிகளவில் குவிக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனாலும் நாங்கள் மூவரும் என்னுடைய முச்சக்கர வண்டியில் (ஆட்டோ) சாரதி சகிதம் வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் கருணாநந்தசாரா, உறுப்பினர் சிவஞானசுந்தரமும் சென்ற பொழுது அவர்கள் உடனடியாக எம்மைச் சுற்றி வளைத்து நாம் கொண்டு சென்ற கேக் உள்ளிட்ட பொருட்களைப் பறிக்க முயன்றார்கள்.

ஆனால் நான் அதனைக் கொடுக்கவில்லை. அப்போது இங்கு பிறந்த நாள் நிகழ்வு செய்ய முடியாது என்றும் பொலிஸார் கூறியிருந்தனர். அதனையடுத்து அங்கிருந்து வெளியேறி வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்காவிற்குச் சென்று அங்கு வைத்து கேக்கை வெட்டுவதற்கு ஆயத்தமாகியபொழுது எம்மைப் பின்தொடர்ந்து வந்த பொலிஸார் அங்கு நின்றிருந்தவர்களைச் சுற்றி வளைத்து நாம் கொண்டு சென்ற பொருட்களை பறிமுதல் செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து எங்களையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு வைத்து 2011-ஆம் ஆண்டு ஒழுங்கு விதிகளின் கீழ் தண்டணைக்குரிய சட்டத்திலே நீங்கள் விதிகளை மீற முற்பட்டிருக்கின்றீர்கள் என்ற காரணத்தைக் கூறி அதனால் தான் கைது செய்து அழைத்து வந்தோம் என்றும் பொலிஸார் கூறியிருந்தனர்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பில் மேல் நடவடிக்கைகள் குறித்து பின்னர் அறிவிக்கின்றதாகவும் பொலிஸார் கூறினர். மேலும் உங்களைத் தொடர்ந்து தடுத்து வைத்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் நீங்கள் செல்லாம் என்று கூறியிருந்ததன் அடிப்படையில் நாங்கள் விடுவிக்கப்பட்டிருந்தோம்.

அதன் போது நாளையதினம் கூட அதாவது இன்று மாவீரர் தினத்தை அனுஸ்டிப்போம் என்று நான் கூறிய பொழுது அதைப் பற்றிப் பிரச்சனையில்லை என்றும் பொலிஸார் கூறினார்கள். ஆனால் அதன் பின்னர் நாங்கள் வெளியில் வந்திருந்தோம்.

தாயகத்தில் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயத்திலே பிரபாகரன் இருந்து கொண்டிருக்கின்றார். அதனை எந்த ஆட்சியாளர்களாலும் அகற்ற முடியாது அல்லது இல்லாமல் செய்ய முடியாது என்பதை அடக்குமுறையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதே வேளை போரிலே கொல்லப்பட்ட எங்களுடைய மாவீரர்கள் அத்தனை பேரையும் நினைவு கூருகின்ற நிகழ்ச்சிகள் தாயகத்தில் மாத்திரமல்ல புலம்பெயர் தேசங்களிலும் அதே போல் தொப்புள் கொடி உறவுகளான தாய்த் தமிழ்த் தேசத்திலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இதற்கமைய தாயகத்திலே உணர்வுபூர்வமாக இந்த மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு முன்வர வேண்டும். எந்தத் தடைகள் வந்தாலும் அத் தடைகளை உடைத் தெறிந்து பல்லாயிரக்கணக்கிலே திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முன்வர வேண்டுமென்றும் தமிழ்ச் சொந்தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மாவீரர்களை நினைவேந்தாமல் அடக்குமுறைகளுக்கு அடிபணிவோமாக இருந்தால் நிச்சயமாக எங்களுக்கு விடுதலையைப் பற்றிச் சிந்திப்பதற்கோ அல்லது அதனை அனுபவிப்பதற்கோ எந்தவிதமான அருகதையில்லை என்பதையும் எங்கள் மக்கள் உணர வேண்டும்.

இதே வேளை இலங்கையின் தகவல் திணைக்களம் தாங்கள் மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதற்கு அனுமதியில்லை என்று கூறியிருக்கின்றார்கள். இவ்வாறான மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்காக நாங்கள் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆகவே அனுமதி கொடுத்ததாக நாங்கள் யாரும் சொல்லவில்லை.

ஆக அனுமதி கொடுத்ததாக பத்திரிகைகளில் எழுந்த விடயத்திற்கு அவர்கள் அனுமதியை தாங்கள் கொடுக்கவில்லை என்று கூறியிருக்கின்றார்கள். அந்தவகையிலே எந்தவிதமான அச்சமும் இல்லாமல் பல்லாயிரக்கணக்கிலே மாவீரர் துயிலுமில்லங்களிலும் எந்தெந்த இடங்களில் அனுஸ்டிக் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றதோ அந்தந்த இடங்களிலே நினைவு கூறி அஞ்சலியைச் செலுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்