அரசமைப்பை ஜனாதிபதி மதிக்கவில்லை; அதனாலேயே நாம் எதிராக செயற்பட்டோம்! தனது தொகுதியில் கட்சி உறுப்பினர் மத்தியில் மாவை விளக்கம்

நாமும் இணைந்து எமது அபிலாஷைகளை முழுமையாகப் பூர்த்திசெய்யாவிட்டாலும் ஓரளவுக்குப் பிரதிபலிக்கின்ற ஓர் இடைக்கால வரைவை முன்வைக்கும் வேளையில், ஜனாதிபதி மைத்திரி 19 ஆம் திருத்தத்துக்கு முரணாக செயற்பட்டு – அரசமைப்புக்கு முரணாகச் செயற்பட்டு – பிரதமரை மாற்றி, நாடாளுமன்றைக் கலைத்துள்ளார். நாளை நாடாளுமன்றில் எமது இந்த இடைக்காலத் தீர்வுத் திட்டம் சட்டமாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டாலும் அதை அரசமைப்புக்கு முரணாக ஜனாதிபதி மாற்றியமைப்பார் என்பதில் அவரது இந்த செயற்பாடு கோடி காட்டுகின்றது. அதற்காகவே நாம் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டோம். நாட்டின் அதியுயர் பீடத்தால் இயற்றப்படுகின்ற சட்டங்கள் மதிக்கப்படவேண்டியவை.

– இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதி ஆதரவாளர்களின் கூட்டம் நேற்று மாலை 4 மணிக்கு வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளரும் காங்கேசன்துறை தொகுதி செயலாளருமாகிய சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து தன்னைத் தலைவராகக் கொண்ட தொகுதி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

நல்லாட்சி அரசை நாமும் சோர்ந்து அமைத்தோம். அதனூடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நாம் மேற்கொண்டுள்ளோம். வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் உள்ளடக்கப்பட்ட பல காணிகள் எமது அதீத முயற்சியால் விடுவிக்கப்பட்டுள்ளன. பல பாடசாலைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மயிலிட்டியில் மிகப்பெரிய மீன்பிடித்துறைமுகம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல கோடிக்கணக்கான நிதிகளை நாம் மிகக் குறுகிய காலத்தில் பெற்றுத் தந்துள்ளோம்.

நாம் தேர்தலில் வாக்குப் பெறுவதற்காக எமது மக்களுக்கு இதைச் செய்யவில்லை. இதைச் செய்கின்றபோதும் நாம் அவர்களிடம் எமக்கு வாக்களிக்கவேண்டும் என்று என்றைக்கும் கேட்டமை கிடையாது.. எமது உள்ளூர் மன்றத் தலைவர்கள் ஊடாக ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு 20 லட்சம் என்று வீதிகளுக்கு ஒதுக்கி வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்னும் பல்வேறு தொழிற்பேட்டைகளை எமது பகுதியில் உருவாக்க எண்ணியுள்ளோம். பல அபிவிருத்தித் திட்டங்களை நாம் திட்டமிட்டு வைத்திருந்த தருணத்தில் ஜனாதிபதி இரவோடிரவாக இவ்வாறான ஓர் அரசமைப்புக்கு முரணான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

நாம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கின்றோம் என்பது அர்த்தமல்ல. இந்த நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு நாடும் சேர்ந்து உருவாக்கிய அரசமைப்பின் இடைக்கால வரைவு இன்னும் சிறிது நாள்களில் நாடாளுமன்ற விவாதத்துக்கு வரவிருந்தது. அதற்கான வேலைகளை நாம் மேற்கொண்டிருந்தோம். அது மூன்றில் இரண்டு வீத வாக்கெடுப்பால் வெற்றிபெறவேண்டும். அதற்குரிய ஏற்பாட்டை நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தெளிவுபடுதத்தி, அதை வெற்றிபெறச் செய்வதற்கான ஏதுநிலை காணப்பட்டபோது ஜனாதிபதி பிரதமரை மாற்றி, நாடாளுமன்றத்தைக் கலைத்து அரசமைப்புக்கு முரணான பல விடயங்களைச் செய்துள்ளார்.

சரி, இந்த அரசமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு பொதுவாக்கெடுப்புக்கு விடப்பட்டு அரசமைப்புச் சட்டமாக உருவாக்கப்பட்டாலும்கூட ஜனாதிபதி தாள்தோன்றித் தனமாக அந்த அரசமைப்பையும் மீறமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதற்காகத்தான் நாம் ஜனநாயகத்தையும் சட்டத்தையும் மதித்து எமது செயற்பாட்டை நகர்த்துகின்றோம்.

நாங்கள் ஆட்சியமைக்கின்ற அரசுகளிடம் சொல்கின்ற விடயம், எமது மக்கள் போரால் பாதிக்கப்பட்டு மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளார்கள். அவர்களுக்குரிய அபிவிருத்திக்குரிய நிதிகள் வடக்கு – கிழக்குக்கு எமக்கூடாகவே செயற்படுத்தப்படவேண்டும். ஆனால், நாம் தங்கள் அரசில் எந்த அமைச்சுப் பதவிகளையும் எடுக்கமாட்டோம்.

மஹிந்த ராஜபக்ஷவிடமும் நாம் எமது மக்களுக்குத் தேவையான வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் கோரிக்கை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் தன்னிடம் பணம் இல்லை. வெளிநாடுகளிடமிருந்துதான் பணத்8தைப் பெறவேண்டும் என்றார். ஆனால், தனக்கு வாக்களிக்குமாறு கோடிகோடியாகக் கொட்டுறார். அபிவிருத்திக்குப் பணம் இல்லையாம். எந்த ஒரு வெளிநாடும் .வர் பிரதமரானமைக்கு வாழ்த்தவில்லை. பின்னர் எவ்வாறு இவரது அபிவிருத்திச் செயற்பாட்டுக்கு அவர்கள் உதவுவார்கள்.

நாட் எமது மக்களுக்கு விளம்பரப்படுத்தாமல் சேவை செய்துகொண்டுதான் இருக்கின்றோம். வீட்டுத் திட்டங்களுக்கு முன்பு 8 லட்;சம் ரூபா வழங்கப்பட்டது. எமது முயற்சியால்தான் 13 லட்சமாக அது உயர்ந்தது. நாம் தெரிவுசெய்து நிதி ஒதுக்கிய பயணாளிகளுக்கு இடைக்கால அமைச்சர் ஒருவர் வடக்கில் வந்து தான் செய்தமை போல் கொ|டுக்கின்றார். கொடுக்கட்டும். – என்றார்.

இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொருளாளரும் யாழ்.மாவட்டக் கிளைத் தலைவருமான பெ.கனகசபாபதி கலந்து கட்சியின் அமைப்பு வட்டாரக்கிளை, தொகுதிக்கிளை அமைத்தல், கட்சியின் தேசிய மாநாடு என்பன தொடர்பாக விளக்கமளித்தார். அவருடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதி செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான அ.பரஞ்சோதியும் கலந்துகொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்