தமிழரசில் மற்றுமொரு  ஜனாதிபதி சட்டத்தரணி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா  நேற்று ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் செய்யப்பட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று 25 சிரேஷ்ட சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்தார். அதில் இருவர் தமிழர்கள். ஒருவர் கே.வி.தவராசா. மற்றவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த சட்டத்தரணியான அருணாசலம் முத்துக்கிருஷ்ணன்.
1981இல் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட கே.வி.தவராசா சுமார் 38 வருடங்கள் மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து வாதாடி வருபவர்.
தமிழ்ப் போராளிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றோருக்கு எதிராகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட கான்ஸ்டபிள் சிவநேசன் படுகொலை வழக்கில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.சிவசிதம்பரத்தின் கீழ் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் கனிஷ்ட சட்டத்தரணியாக முன்னிலையானவர் தவராசா. அன்று முதல் அண்மையில் கதிர்காமர் படுகொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட எதிரி வரை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட பல நூறு வழக்குகளில் முன்னிலையாகி வாதாடியவர் அவர்.
மனித உரிமைகளுக்காகக் கொழும்பில் துணிச்சலுடன் குரல் எழுப்பிய சட்டத்தரணி தம்பதிகள் என கே.வி.தவராசாவும், கெளரிசங்கரி தவராசாவும் அதற்காகத் தமிழ் ஆர்வலர்களால் பெரிதும் மதிக்கப்படுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. கடந்த வருடம் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் கே.வி.தவராசா இவ்வருடம் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்