கர்ப்பிணி தாய்க்கு எச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்: இரத்தம் வழங்கிய இளைஞர் உயிரிழப்பு

சாத்தூர் கர்ப்பிணி தாய்க்கு எச்.ஐ.வி இரத்தம் ஏற்றிய விவகாரத்தில் இரத்தம் வழங்கிய இளைஞர், மதுரை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, எச்.ஐ.வி. தொற்று இருப்பதை அண்மையில் தான் குறித்த இளைஞன் அறிந்துள்ள நிலையில் மிகவும் மனவேதனைக்கு உள்ளாகியுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 26 ஆம் திகதி, தனது உயிரை மாய்த்துகொள்வதற்கு விஷத்தை அருந்தியுள்ளார்.

இவ்விடயத்தை அறிந்த குடும்பத்தினர், உடனடியாக ராமநாதபுரம் அரச வைத்தியசாலையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக மதுரை அரச வைத்தியசாலையில் குறித்த இளைஞன் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளன. இருப்பினும் இன்றைய தினம், இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது குடும்பத்தினர் இளைஞனின் மரணம் தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, “தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதை தானாக முன்வந்து தெரிவித்த நிலையில், பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக  கேள்விகள் எழுப்பப்பட்டமையால் மனவேதனைக்கு உள்ளாகினார்.

குறித்த மனவேதனைதான் அவரை தற்போது கொன்றுவிட்டது” என குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

மதுரை- விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணியொருவருக்கு இரத்த அணுக்கள் குறைவாக இருப்பதாக கூறி, சாத்தூர் அரச வைத்தியசாலையில் இரத்தம் செலுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சில நாட்களின் பின்னர் அப்பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டமையால், இவ்விடயம் தொடர்பில் பரிசோதனை நடத்தியபோது கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் அப்பெண்னுக்கு 19 வயதான குறித்த இளைஞனின் இரத்தம் செலுத்தப்பட்டமை கண்டறியப்பட்டமையால் பெரும் சர்ச்சையை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்