கூட்டமைப்பை மகிழ்விக்கும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு இடமளியோம்: லக்ஷ்மன் யாப்பா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மகிழ்விக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தத்தையும் மேற்கொள்ள தாம் இடமளிக்க போவதில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில், நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இன்று தனிப்பெரும்பான்மையான அரசாங்கம் ஒன்று இல்லாத நிலையில், நாட்டு மக்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்.

மேலும், அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ரவூப் ஹக்கீம் தற்போது கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்காக அவர்களின் கோரிக்கையை, அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் உள்ளடக்க வேண்டும் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு ஒரு தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகும்.

ஆனால், தமிழர்களின் நலனுக்கு அப்பால் பிரதமர் ஒருவரை பாதுகாப்பதற்காக, நீதிமன்றிலும் நாடாளுமன்றிலும் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்காக அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதா என்பதில், எமக்கு பிரச்சினைகள் இருக்கின்றன.

இவர்கள். ஏதிர்க்கட்சியாக இருந்துக்கொண்டு அரசாங்கத்துக்கு உதவினார்கள். பிரதமர் ஒருவரை நியமிக்க உதவினார்கள். இதுதான் அவர்களின் செயற்பாடாக இருந்தது.

இதுவரை தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளாது, தமது லிபரல் கொள்கைகளுக்கு இணங்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றில் செயற்பட்டார்கள்.

அதேபோல், லக்ஷ்மன் கிரியெல்ல எப்படியாவது இந்த ஆண்டுக்குள் அரசியலமைப்பைக் கொண்டுவருவோம் என்றுக் கூறுகிறார்.

இத்தரப்பினருக்கு நாம் ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும். அதாவது, தமிழர்களுக்கு எந்தவொரு பலனுமற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மகிழ்விக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தையும் நாடாளுமன்றில் நிறைவேற்ற நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை” எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்