பிரபாகரனைவிட ஆபத்தானவை சுமந்திரனின் செயற்பாடுகள்!

சுமந்திரனின் தற்போதைய அரசியல் நகர்வுகளைப் பார்க்கின்றபோது, அவர் செயற்படுகின்ற விதம் பிரபாகரனைவிட ஆபத்து மிகுந்தவையாகவும் சிங்கள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துபவையாகவும் அமைந்து காணப்படுகின்றன.

– இவ்வாறு தெரிவித்தார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.

ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்ணியின் சுதந்திர ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

புதிய அரசமைப்பைத் தயாரிக்கும் நிர்ணயசபையில் நானும் இருக்கிறேன். பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் அரசியலமைப்பு வரைவு சமர்ப்பிக்கப்படும் என எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சுமந்திரன் பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்பைக் கொண்டுவந்தே தீருவேன் என்று குறிப்பிடுகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இணைந்தே இந்த அரசமைப்பைக் கொண்டுவர உள்ளன என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர் வரைவை சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கும், கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் இருக்கலாம். இதனாலேயே கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக கையைத் தூக்குகின்றனர்.

பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு முறையிலும் புதிய அரசியல்யாப்பிற்கான வரைவு, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது. சுமந்திரன் இவ்வாறு கூறுவதன் மூலம், தமிழர்களை ஏமாற்றுவதுடன் மாத்திரம் இல்லாமல், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே பாரிய பிளவினையும் ஏற்படுத்துகிறார்.

புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்காகவே இவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் தொடர்ந்து வைத்திருக்கின்றனர்.

சுமந்திரனின் இவ்வாறான செயற்பாடுகள் நாட்டுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பிரபாகரனைவிட இவரது செயற்பாடுகள் ஆபத்து மிக்கவையாக உள்ளன. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்