மஹிந்தர், சுமன், ரணில் விருப்பத்துக்கு அரசமைப்பை உருவாக்கமுடியாது -அனுர

“பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்பு வரைவு கொண்டுவரப்படும் எனச் சிலர் கூறுகிறார்கள். ஆனால், இது முற்றிலும் பொய்யான ஒரு கருத்து. தற்போது அரசமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பிலேயே நாடாளுமன்றில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. புதிய அரசமைப்பை ரணில் விக்கிரமசிங்க, சுமந்திரன், மஹிந்த ஆகியோருக்கு ஏற்றாற்போல உருவாக்கமுடியாது.”

இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜே.வி.பி யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க. புதிய அரசமைப்பு தொடர்பில் மக்களுக்குப் பொய்யான கருத்துக்களைக் கூறி, மீண்டும் இனவாதத்தைப் பரப்பச் சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த ஆண்டு தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கிறது. மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதேபோல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்யும் கடப்பாடும் எமக்கு உள்ளது.

இந்த அரசுக்கு நீண்ட காலம் பயணிப்பதற்கான பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில், பொதுத்தேர்தலுக்குச் செல்ல வேண்டிய நிலைமையிலும் நாம் காணப்படுகிறோம்.

தேர்தல்களின்போது இனவாதம் பரப்பப்படுவது நாட்டின் தொடர்ச்சியாக இடம்பெறும் ஒன்றாக இருக்கிறது. தெற்கில் மஹிந்த தரப்பினரால் இனவாதப் பரப்புரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை ஜே.வி.பி. ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

போருக்குப் பின்னர் எமது நாட்டின் அரசியலில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்து மக்களுக்கும் உரித்தான அரசமைப்பை நாம் கொண்டுவர வேண்டும். இதனாலேயே 78ஆம் ஆண்டு  அரசமைப்புக்குப் பதிலாக புதிய அரசமைப்பைக் கொண்டுவர வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.

சிலர், பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்படும் எனக் கூறுகிறார்கள். ஆனால், இது முற்றிலும் பொய்யான ஒரு கருத்தாகும். தற்போது அரசமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பிலேயே நாடாளுமன்றில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

புதிய அரசமைப்பை ரணில் விக்கிரமசிங்க, சுமந்திரன், மஹிந்த ஆகியோருக்கு ஏற்றாற்போல உருவாக்கமுடியாது. அதற்குப் பல கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்