அரசியல்வாதியிடம் பணம் பெற்ற சிலர் இனவாதத்தை தூண்டுகின்றனர் – அமைச்சர் வடிவேல் சுரேஸ்

பதுளை மாவட்டத்தின் பிரபல அரசியல்வாதி ஒருவரிடம் பணம் பெற்றுக்கொண்டு இனவாதத்தைத் தூண்டும் சமூக சீரழிவான செயற்பாடுகளில் சிலர் ஈடுப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு கண்டி கலவரம் போன்று பசறையிலும் கலவரம் இடம்பெற விடமாட்டேன் என்றும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக ஒரு சிலர் இனவாத போக்குடன் செயற்படுவது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பொன்றை பதுளை ஹெரிடேஜ் விருந்தகத்தில் இன்று (திங்கட்கிழமை) அமைச்சர் வடிவேல் சுரேஸ் ஏற்பாடு செய்திருந்தார்.

குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “தற்போது எனக்கு எதிராக  ஒருசிலர் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றனர். அதற்கு எதிராக செயற்பட ஐக்கிய தேசிய கட்சியின் ஏனைய ஆதரவாளர்கள் முன்வந்துள்ளனர். அவர்கள் அவ்வாறு செயற்படும் சந்தர்ப்பத்தில் பசறை பிரதேசத்தில்  ஒரு சுமூகமற்ற நிலவரம் ஏற்படும்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியினர் என சொல்லிக்கொண்டு இந்த முறையற்ற செயற்பாடுகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.  இவர்கள் பல சமூகவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள். பதுளை மாவட்டத்தின் பிரபல அரசியல்வாதியிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்த சமூக சீரழிவான செயற்பாடுகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

இது சம்பந்தமாக ஆராய்து முடிவெடுக்குமாறு பசறை பொலிஸாருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின்  தலைமையகத்திற்கும் அறிவித்துள்ளேன். அவர்கள் உடனடியாக தீர்வு காண்பதாக கூறியுள்ளனர்.

திகன, மாவனெல்லையில் நடைபெற்ற இனக்கலவரம் போல் பசறையில் நடைபெற நான் ஒருபோதும்  அனுமதிக்க மாட்டேன்.  மக்களும் அவதானமாக இருக்க வேண்டும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடவியலாளர் சந்திப்பில் ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆ.கணேசமூர்த்தி  பசறை  ஐ.தே.கட்சியின் பிரதேச சபை தலைவர் உட்பட அனைத்து பசறை  ஐ.தே.கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு இந்த விடயம் தொடர்பில் அதிருப்தியினை தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்