கபோனில் ஆட்சிக்கவிழ்ப்பு: இராணுவம் அறிவிப்பு

மத்திய ஆபிரிக்க நாடான கபோனின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி குடும்பத்தின் 50 வருடகால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இன்று (திங்கட்கிழமை) இந்நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

நாட்டின் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

அந்நாட்டு தேசிய வானொலி நிலையத்தை இன்று காலை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த இராணுவம், அதன்மூலம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

தலைநகர் லிப்ரேவிலியில் இராணுவ கவச வாகனங்கள் பெருமளவில் காணப்படுவதோடு, வீதிகளில் இராணுவ தாங்கிகளும் போடப்பட்டுள்ளன.

கடந்த 2009ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஜனாதிபதி அலி பொங்கோ, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மொரோக்கோவில் சிகிச்சைபெற்று வருகின்றார்.  எனினும், தற்போது நலமாக உள்ளதாக புதுவருட செய்தியில் அறிவித்திருந்தார்.

ஆனால், அந்த செய்தியில் தமக்கு திருப்தியில்லையென்றும், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் இராணுவம் கூறியுள்ளது.

இதேவேளை, மத்திய அமெரிக்க நாடான கொங்கோவில் தேர்தல் முடிவு தாமதமாகியுள்ளது. இந்நிலையில், அருகிலுள்ள நாடான கபோனில் வன்முறைகள் ஏற்படலாம் என்பதை கவனத்திற்கொண்டு அமெரிக்க இராணுவத்தினர் 80 பேர் முதற்கட்டமாக கடந்த புதன்கிழமை கபோனுக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்