ராஜபக்ஷ குடும்பத்தினரை சிறையில் அடைக்க முயற்சி – ஜி.எல். பீரிஸ் குற்றச்சாட்டு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை போர்க்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைக்குள் அடைக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் தற்போது பெரும்பான்மையற்ற அரசாங்கம் தான் இருக்கிறது. இதற்கு நாடாளுமன்றில் 113 ஆசனங்கள் இல்லை.

இந்த அரசாங்கத்துக்கு சில செயற்பாடுகள் இருக்கின்றன. இவை மக்கள் முற்றாக நிராகரித்தவையாகும். இதனை மக்கள் எதிர்ப்பார்க்கவில்லை.

ஸ்திரமாக முடிவுகளை எடுக்கும் அரசாங்கம் அன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கட்டுப்பட்ட அரசாங்கமாகவே இது இருக்கிறது. குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்தான் அரசாங்கத்தை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்துக்கொண்டு சர்வதேசத்தினர், புலம் பெயர் அமைப்பினர் அனைவரும் அரசாங்கத்தை கட்டுப்படுத்துகிறார்கள். இதனாலேயே, புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதனை மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

இது அரசாங்கத்துக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும், மக்களின் விருப்பத்துக்கு மாறாக இதனைக் கொண்டுவரவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ருத்ரகுமார் உள்ளிட்ட தரப்பினர், மஹிந்த மற்றும் கோட்டாவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்கள். இந்த வழக்கை, சிவானி தியாகராஜா எனும் சட்டத்தரணி ஊடாக கொண்டுசெல்லவும் தீர்மானித்துள்ளார்கள். இதனை சாதாரண ஒரு விடயமாக நாம் கருத முடியாது. இதற்காக தற்போது, சர்வதேச மட்டத்திலான சட்டத்திரணிகளின் ஆலோசனைகளையும் பெற்றுவருகிறார்கள்.

அத்தோடு, யஸ்மின் சூகாவும் இலங்கை இராணுவத்தின் 57 தலைவர்களை சர்வதேச நீதிமன்றின் ஊடாக சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இவ்வாறு இவையணைத்தும் இன்று சர்வதேச உதவியுடன் இடம்பெற்று வருகிறது.

இதற்கு சமமான பயங்கரமான செயற்பாடுகள் எமது நாட்டுக்குள்ளும் இடம்பெற்று வருகிறது. அந்தவகையில், மஹிந்த உள்ளிட்ட 47 உறுப்பினர்களை நாடாளுமன்றிலிருந்து நீக்கவும் முயற்சிகள் இடம்பெற்றுவருகிறது.

இதற்குப் பதிலாக ஏனையவர்களை நியமித்து, புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்