லக்கலை புதிய நகர் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

மொரகஹாகந்த வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கலை புதிய நகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது.

மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தின் காரணமாக நீரில் மூழ்கும் லக்கல நகருக்குப்பதிலாக இந்த லக்கலை புதிய நகர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளைக்கொண்ட புதிய லக்கலை நகரம் ‘லக்கலையின் எழுச்சி’ என்ற செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வீடுகள், பாடசாலை, வைத்தியசாலை, பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம், விளையாட்டு மைதானம், பேருந்து தரிப்பிடம், பொதுச்சந்தை, வீதி கட்டமைப்பு உட்பட அரச நிறுவனங்களின் கட்டடங்களையும் இந்நகரம் உள்ளடக்கியுள்ளது.

புதிய லக்கலை நகரை அமைப்பதற்காக 450 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு 26 அரச நிறுவனங்களுக்கான கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மக்கள் எளிதாக நாடக்கூடிய வகையில் ஒவ்வொரு அலுவலகத்தையும் தொடர்புபடுத்தக்கூடியவகையில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மேலும், லக்கலை புதிய வைத்தியசாலையையும், இரண்டாம் நிலை பாடசாலையையும் ஜனாதிபதி இன்று திறந்துவைக்கவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அதன் ஒரு அங்கமாக பழைய லக்கலை நகருக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய லக்கலை நகர் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்