தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுத்தர பிரதமர் உறுதி – கூறுகிறார் சிறிநேசன்

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுத்தருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திசவீரசிங்கம் நான்காம் குறுக்கு வீதியை புனரமைக்கும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்டன.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் 40 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கிட்டின் கீழ் இந்த வீதி புனரமைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “கடந்த ஆண்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு ஜனநாயக அரசியலுக்கு அப்பால் கேலிக்கூத்தான விடயங்கள் நடந்தேறியது.

சட்ட ஆட்சியை பாதுகாக்கவேண்டும், அரசியல் யாப்பினை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் நியாயமாக, நீதியாக சிந்தித்ததன் அடிப்படையில் சட்ட விரோதமான, அடாவடித்தனமான சூழ்நிலையினை தவிர்த்திருந்தோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த இடத்திலும் பணத்திற்கோ, பதவிக்கோ பலியாகாத கட்சி என்ற உண்மையினையும் நாங்கள் நிலைநாட்டியுள்ளோம். ஒருவர் விதிவிலக்காக சென்றாலும் ஏனைய அனைவரும் பொதுவிதியாக ஒரு கொள்கையின் கீழ் இருந்துள்ளோம்.

தற்போது ஆட்சியமைத்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினையும், பொருளாதார ரீதியான அபிவிருத்தி திட்டங்களையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.

அதன்படி எதிர்வரும் இரண்டு வருடகாலப்பகுதியில் பலவிதமான அபிவிருத்திகளை செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தினை நாங்கள் கட்சியுடன் இணைந்து உறுதியாக பின்பற்றுவோம்.“ என்றும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், மாநகரசபை உறுப்பினர் இராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்