நாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பித்தமைக்கு காரணம் அதிகார இழுபறி ;நஸீர் அஹமட்

ஜனநாயக விரோத அதிகார மோகத்தினாலேயே நாடு தற்போது அபிவிருத்திகளின்றியும் முதலீடுகளின்றியும் முடங்கிப் போயுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழ்நிலையில் நாட்டின் முதலீட்டுப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசியமைப்பின் பிரகாரம் நாட்டின் ஜனநாயகம், மனித உரிமை, மக்களின் பாதுகாப்பு, மக்களாட்சி என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அவை ஓரளவுக்கு நமது அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்படடிருந்தாலும் இனவாத அரசியல் மேலாண்மைத்தனம் காரணமாக இவற்றை உறுதிப்படுத்த ஆட்சியாளர்கள் தவறிக் கொண்டே வருகின்றனர்.

அரசியலமைப்பின் பிரகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாது இழுத்தடித்துக் கொண்டே வருவது இதற்கு ஒரு உதாரணமாகும்.

இது ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாகவும் பார்க்கப்படவேண்டியுள்ளது.

நாட்டின் ஒன்பது மாகாண சபைகளில் தற்போது ஆறு மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்டன.

அதிலும், கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இப்பொழுது ஒன்றரை வருடங்கள் கழிந்தும் விட்டன.

ஆனால், குறிப்பிட்ட மாகாணங்களில் மக்களாட்சி இல்லாதது பற்றி அரசாங்கம் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாது இழுத்தடிப்பதன் மூலம் மக்களாட்சியைக் கேலிக் கூத்தாக்கிவிட்டு மத்தியில் நல்லாட்சி நிலவுகிறது என்று கூறுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை.

கலப்புத் தேர்தல் முறையைக் கொண்டு வந்து  கபட நாடகமாட எடுக்கப்படும் முயற்சியில் குறிப்பாக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் முழுமையாக இல்லாமற் செய்யப்படுகின்றது.

எனவே, அரசாங்கம் பழைய விகிதார பிரதிநிதித்துவ முறையின்படி தேர்தல்களை நடத்தி சிறுபான்மையினருக்குள்ள ஜனநாயகத்தை உயிர்ப்பூட்ட உதவ வேண்டும்.

நாட்டில்  முன்னொருப்போதும்   இல்லாத வகையில்  தற்போது  தேர்தல்கள்  பிற்போடப்பட்டு வருகின்றன. இந்த ஜனநாயக மறுப்பு நிலை முடிவுக்குக் கொண்டு வரப்படாவிட்டால் மக்கள் அணிதிரள வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, இதுபற்றி அரசாங்கம் முக்கியத்துவமளித்துச் சிந்திக்க வேண்டும்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உற்பத்தி, சந்தைப் பொருளாதாரம், கைத்தொழில் வர்த்தக முதலீடுகள், புதிய ஊக்குவிப்புக்கள் எதுவுமின்றி தற்போதைய பொருளாதாரம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இது நாட்டின் எதிர்காலத்திற்கு உகந்ததல்ல. நிலைமை இப்படியே தொடருமாயின் நாடு அபிவிருத்திகளின்றி வறுமை நிலைக்குப் பின்னோக்கிச் செல்லும் என்றும் அவர் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்