மக்களின் தேவையறிந்து திறம்படப் பணியாற்றுக! – வடக்கின் புதிய ஆளுநருக்கு சம்பந்தன் அறிவுரை

“அதிகாரத்தின் பக்கம் மட்டும் நிற்க வேண்டாம். மக்களின் தேவையறிந்து அவர்களின் மனதை வெல்லும் வகையில் திறம்படப் பணியாற்றுங்கள். போரால் வடக்கு மாகாணமும் அங்குள்ள மக்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையைக் கவனத்தில்கொண்டு கடமையாற்றுங்கள்.”

– இவ்வாறு வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவனிடம் நேரில் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.

யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ள வடக்கு மாகாண ஆளுநர், நேற்றுக் கொழும்பில் கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அப்போது அவரிடம் இந்த விடயத்தைக் கூறினேன் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“இந்தச் சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ள நிலையில் என்னை வீடு தேடி வந்து சந்தித்தமை எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

இந்தச் சந்திப்பின்போது வடக்கு மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் பேசினோம். காணி, கல்வி, தொழில், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தினோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்