இ.தொ.கா.வுடன் எந்த சந்ர்ப்பத்திலும் இணைய மாட்டேன் – திகாம்பரம்

அரசியல் ரீதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் எந்த சந்ர்ப்பத்திலும் இணையமாட்டேன் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக தொழிற்சங்க ரீதியில் யாருடனும் கைக்கோர்க்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பழனி  திகாம்பரத்தின்  52ஆவது  பிறந்த தினத்தை முன்னிட்டு பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டப்பகுதிக்கு 50 தனி வீடுகளும், போகாவத்தை தோட்டபகுதிக்கு 55 தனி வீடுகளுமாக 105 புதிய வீடுகளை அமைச்சர் மக்கள் பாவனைக்கு  வைபவ ரீதியாக கையளித்தார்.

இதன்போது அங்கு  இடம்பெற்ற  கூட்டங்களில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாயை பெற்றுத் தருவதாக ஆசை காட்டிய கருப்புசட்டைகாரர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் 620 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கு கையொப்பமிடவுள்ளனர்.

இவ்வாறு காட்டிக்கொடுப்பார்கள் என்று தெரிந்தே, நான் அன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட வேண்டாம் தொழிலுக்கு செல்லுங்கள் என கூறினேன்.

இந்தநிலையில் கூட்டு ஒப்பந்தத்தினூடாக குறைந்த சம்பளத்தை பெற்றுத்தர தயாராக வேண்டாம். அரசியல் ரீதியாக பிளவு ஏற்பட்டாலும் தொழிற்சங்க ரீதியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அழுத்தம் கொடுத்து நியாயமான உயர்வான சம்பளத்தை பெற்றுகொடுக்க வேண்டும். அதற்கு முன்வாருங்கள்.

எனது அமைச்சு பதவியை துறக்க தயாராகவுள்ளேன். அதேவேளை கூட்டு ஒப்பந்தத்தைவிட்டு வெளியே வாருங்கள் ஒருமித்து போராடுவோம் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்போம்.

அரசியல் ரீதியாக இ.தொ.காவுடன் ஒருகாலமும் ஒன்றினைய மாட்டேன் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தொழிற்சங்க ரீதியாக ஒன்றுபட்டு போராட எவருடனும் கைகாகோர்க்க தயாராகவுள்ளேன்“ என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்