இலங்கையின் நீதித்துறையின் மீது சுமந்திரன் சுமத்தும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது

இலங்கையின் நீதித்துறையின் மீது நம்பிக்கை இல்லை என சுமந்திரன் சுமத்தும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் புஞ்சி நிலமே தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை நீதிமன்ற வரலாற்றில் இராணுவ மேஜருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று (வியாழக்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில், குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்

எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றியிருந்தார்.

இதன்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் சர்வதேச பொறிமுறையின் கீழான விசாரணையே அவசியமென சுமந்திரன் வலியுறுத்தினார். அத்துடன் இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட்டாலும், போர்க்குற்ற விசாரணையை இலங்கையில் முன்னெடுக்க முடியாதென சுட்டிக்காட்டினார்.

இந்த கருத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் புஞ்சி நிலமே தெரிவிக்கையில்,

“சுமந்திரன் இலங்கையின் நீதிக் கட்டமைப்பினையும் அதன் தீர்ப்பினையும் பாராட்டும் அதேநேரம் சர்வதேச விசாரணையையும் கோருகிறார்.

இலங்கை நீதிமன்றம் சிறந்த தீர்ப்பினை வழங்கும் என்றால் சர்வதேச விசாரணை எதற்காக. இதற்கு முன்னரும் இலங்கைப் படையினருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் இலங்கையில் எடுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் இராணுவத் தளபதி, முன்னாள் கடற்படைத் தளபதியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. 1998ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில் மேஜர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்படைப் பேச்சாளர் உட்பட கடற்படை அதிகாரிகள் 12 பேருக்கு எதிராக வழக்கு, யுத்த குற்றம் தொடர்பில் பிரேசிலின் இலங்ககைக்கான தூதுவர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக வழக்கு, கடற்படையின் மூவர் கைது போன்ற ஊடகச் செய்திகள் பல இருக்கின்றன.

இது இலங்கை படையினர் மீது இலங்கை நீதித்துறையின் சட்ட செயற்பாடுகள். இந்த செய்தியெல்லாம் யாருக்காக எதனைச் சொல்கிறது” என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்