ஆளுநர் நியமனத்தை இன ரீதியாக சித்தரிக்க சிலர் முயற்சி – ஹிஸ்புல்லா சாடல்

ஆளுநர் நியமனத்தை இன ரீதியாக சித்தரிக்க அரசியல் பிற்போக்கு சக்திகளும், வெளிநாட்டு புலம்பெயர் மக்களில் சிலரும் முயற்சிப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தோடு ஆளுநர் நியமனத்தை இன ரீதியாக பார்க்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா  நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதன் பின்னர் சிலர் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளனர். இதன் காரணமாக ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு போன்ற விடயங்களில் ஒரு சிலர்  ஈடுபடுகின்றனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற இனரீதியான போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்துள்ள நிலையில், மிகவும் நெருக்கமாக வாழ வேண்டிய தமிழ் முஸ்லிம் சமூகத்தினை அரசியல் சக்திகளும், வெளிநாட்டு புலம்பெயர் மக்களில் சிலரும் மீண்டும் கிழக்கு ஆளுனர் நியமனத்தினை வைத்து, குழப்பத்தினை ஏற்படுத்தி அதன் மூலமாக அரசியல் ரீதியாக அனுகூலத்தினை பெற முயற்சிக்கின்றனர்.

மேலும், சமூக ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகளை பகிர்வதிலும் அதனை ஏனைய மக்களுக்கு அச்சுருத்துவதன் மூலமாகவும் குழப்பத்தினை ஏற்படுத்தாமல் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

எதிர்வரும் காலங்களில் மூவின மக்களையும் சரிசமமாக பார்த்து என்னால் முடிந்த சேவையினை எனது காலப்பகுதியில் செய்வேன். கடை அடைப்புக்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடத்தி இனங்களுக்கு எதிராக வன்முறைகளை, குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் யாரும் ஈடுபட வேண்டாம்.

அத்துடன் சகல இனங்களையும் சேர்ந்த சமயத் தலைவர்கள், சமூக நிறுவனங்கள், அரசியல் தலைமைகள் அனைவரும் இவ்விடயங்களில் சுமூகமான நிலைமையினை ஏற்படுத்துவதற்கு உதவி வழங்க வேண்டும் என்பதுடன், இம்மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ஏற்றவகையில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்