ஹப்புத்தளை பிரதேச சபையின் வரவு- செலவுத்திட்ட நிதி அறிக்கை நிறைவேற்றம்

ஹப்புத்தளை பிரதேச சபையின், இவ்வருடத்திற்கான வரவு- செலவுத்திட்ட நிதி அறிக்கை நான்கு அதிகப்படியான வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற, பிரதேச சபையின் அமர்வின்போதே குறித்த வரவு செலவுத்திட்ட நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் நிதி அறிக்கைக்கு ஆதரவாகவும், ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 7 உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த ஒரு உறுப்பினர் உள்ளடங்களாக 8 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

இதன்படி 4 மேலதிக வாக்குகளினால் வரவு செலவுத்திட்ட நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த வரவு– செலவுத்திட்ட நிதி அறிக்கை கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில், வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது முறையாக வாக்கெடுப்புக்கு இவ்வறிக்கை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்