நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்துக்குள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – ரவூப் ஹக்கீம்

தீர்க்கமுடியாத பல பிரச்சினைகளை தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்துக்குள் செய்துமுடிப்பதென்பது, ஆசனங்களின் சமன்பாட்டினால் சாத்தியமில்லாமல் போய்விட்டதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய ‘ஏ.ஆர். மன்சூர் வாழ்வும் பணிகளும்’ நூல் வெளியீட்டு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், “வெற்றிகளை வைத்து அரசியல்வாதிகளை எடைபோடுவதில்லை. தோல்விகளை கண்டு துவண்டுபோகாமல், தனது அரசியல் அந்தஸ்தை காப்பாற்றிக்கொண்டு எப்படி வாழ்கிறார் என்பதை வைத்துத்தான் எடைபோடப்படுகின்றனர்.

அந்தவகையில் மன்சூர் என்ற அரசியல்வாதி மரணிக்கும் வரை தனது அரசியல் அந்தஸ்தை இழக்கவில்லை. அவர் மக்கள் சேவையை தனது மனதில் சுமந்தவராகத்தான் கடைசிவரைக்கும் இருந்தார் என்பதற்கு நிறைய சாட்சிகள் இருக்கின்றன.

அரசியலில் ஆரம்பத்தில் எமது எதிரியாக இருந்த ஏ.ஆர். மன்சூர், இறுதிக் காலத்தில் எமது கட்சியுடன் இணைந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குபவராக மாறினார்

தீர்க்கமுடியாத பல பிரச்சினைகள் இருந்துகொண்டிருக்கின்றன. தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்துக்குள் அதனைச் செய்துமுடிப்பது என்பது, ஆசனங்களின் சமன்பாட்டினால் சாத்தியமில்லாமல் போய்விட்டது.

அடுத்த தேர்தலின் பின்னர் இதை நிரந்தர சுபீட்ச பூமியாக மாற்றுவதற்கு தமிழ், முஸ்லிம் மக்களிடையே இருக்கின்ற புரிந்துணர்வை வளர்ப்பதும், பேரின அரசியல் தலைமைகளிடம் சரியான அணுகுமுறைகளை கையாள்வதற்கும் மன்சூரின் பணிகள் எங்களுக்கு துணையாக அமையும்“ என தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் புதல்வருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேராதனை பல்கலைக்கழக தொழில்துறை தலைவர் பேராசிரியர் எம்.ஏ. நுஹ்மான், தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் உரைகள் நிகழ்த்தியதுடன், இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், கல்முனை மாநகர சபை மேயர் ரக்கீப், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்