தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையை வள்ளுவர் தொடர் ஆண்டு மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது

நக்கீரன்

தைமுதல்நாள் தமிழர்களின் தைப்பொங்கல், புத்தாண்டு, வள்ளுவர்பிறந்தநாள் ஆகும்இந்த நாள் உலகளாவிய அளவில் தமிழர்கள் வாழும் நாடுகளில்  கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாள் வானியல் அடிப்படையில் ஞாயிறு   தனது வட திசைப் பயணத்தில் தனு இராசியில் இருந்து மகர இராசியில் புகும் நாள் ஆகும்.

உண்மையில் இந்த நிகழ்வு டிசெம்பர் 22, 2018  ஆம் நாள்  பிப 11.19 மணி அன்று இடம்பெற்றுவிட்டது. அதனைப் பனிக்கால ஞாயிறு திருப்புநிலை (Winter Solstice)எனவானியலாளர்கள் அழைப்பார்கள்.

புவி தனது அச்சில் ஞாயிறைச் சுற்றிவரும்போது ஒவ்வொரு ஆண்டும் அதன் சுற்றுப்பாதையில் ஞாயிறு, நிலா இரண்டின் ஈர்ப்பு விசை காரணமாக  அண்ணளவாக 50.3 வினாடிகள் பின்னோக்கி  நகர்ந்துவிடுகிறது. இதனை அயனாம்சம் என அழைப்பார்கள். இதன் அடிப்படையில்  71.6 ஆண்டுகளில் 1 பாகை வேறுபாடு  ஏற்படுகிறது. லாஹிரி கணிப்பின்படி இன்று (2019-14-01) இந்த வேறுபாடு  24-7-20 பாகை ஆக இருக்கிறது. அண்மைக் காலமாக சாதகம் கணிப்பவர்கள் இந்த வேறுபாட்டைக் கணக்கில் எடுத்து பிறந்த நாள், நேரத்தை சீரமைத்து சாதகம் எழுதுகிறார்கள்.

இதனால் புண்ணிய காலங்கள் எல்லாம் மாறிவிட்டன.  ஞாயிறு மகர இராசியில் புகும் நாளே பொங்கல் நாள் என்றால் பொங்கலை டிசெம்பர் 21, 2018 நாள் கொண்டாடியிருக்க வேண்டும். அப்படிச் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால் பழைய வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடும் ஆண்டுகளும் மன்னர்களின் அகவைகளும் நாம் இன்றுள்ள ஆண்டுகளுக்கும் அகவைகளுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை.  சங்ககால பாண்டிய மன்னர்கள் நீடுழி ஆண்டுகள்  வாழ்ந்ததாகவும் 120, 130, 150 ஆண்டுகள் ஆட்சி செய்ததாவும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் அவை யாவும் இக்கால நாட்கள், மாதங்கள், ஆண்டுகளை அடிப்படையாக கொண்டவை அல்ல.

அக்காலத்தில் எதனை அடிப்படையாக வைத்து ஆண்டுகள் கணிக்கப்பட்டன என்பதை அறிய முடியவில்லை. தற்போது நடை முறையில்  இருக்கும் 365.25 நாட்கள் ஓர் ஆண்டு என்ற கணிப்பியல் ஞாயிறை  மூலமாக வைத்துக் கணிக்கப்படுவதாகும்.  இதுவும் நான்கு ஆண்டுக்கொருமுறை ஒரு நாள்  கூட்டப்படுகிறது. சங்ககாலக் கணிப்புகள் பெரும்பாலும் இளவேனில் முதுவேனில், கார் கூதிர், முன்பனி பின்பனி என ஆறு  காலங்களை கொண்டே அமைந்துள்ளன. தொல்காப்பியத்தில் ஆண்டுப்பிறப்பு  இன்றைய ஆவணி மாதத்தில்  தொடங்கி ஆடியில் முடிந்ததாகப் சொல்லப்பட்டுள்ளது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. எனவே தை முதல் நாளை பொங்கல் விழாவாகவும்  திருவள்ளுவர் பிறந்த நாளாகவும் அதுவே  வள்ளுவர் தொடர் ஆண்டின் தொடக்கமாகவும் கலைஞர் கருணாநிதி 2008 இல் அறிவித்தார். அதனை 2011 இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மாற்றி சித்திரை முதல் நாள் ஆண்டின் தொடக்கம் என மாற்றிவிட்டார். இதனால் தமிழர்கள் இரண்டு புத்தாண்டுகளை – சித்திரைப் புத்தாண்டு, தைத் தமிழ்ப் புத்தாண்டு – கொண்டாடிவருகிறார்கள்.

வானியல் அடிப்படையில் சித்திரை முதல் நாளன்று ஞாயிறு மேட இராசியில் புகுகிறது என்பது சரியே. ஆனால் இந்த முறைப்படி பிரபவ முதல் அட்சய ஈறாகக் கணிக்கும்  காலம்  60 ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும். அதன் பின்னர் மீண்டும் பிரபவ ஆண்டில் இருந்து  ஆண்டுகள் தொடங்கும். இதனால் தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இருப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மன்னர்கள், புலவர்கள், புரவலர்களது பிறப்பு இறப்பில் இருக்கும் மயக்கத்துக்கு தமிழர்களுக்கு எனத் தொடர் ஆண்டு இல்லாததே காரணம். இதன் அடிப்படையில் திருவள்ளுவர் கிமு 31 இல் தை முதல் நாளில்  பிறந்தார் எனக் கணித்து தொடர் ஆண்டு தொடக்கப்பட்டது. கிறித்து பிறந்த ஆண்டோடு 31 ஆண்டுகளைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு 2050 நாளை பிறக்கிறது.

நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள்.

பண்டைய காலத்தில் பபிலோனியர். உரோமர் போன்றோர் மார்ச்சு 23 யைப் புத்தாண்டாகக் கொண்டாடினார்கள். காரணம் அது இளவேனிலின் வருகையையும் அதனால் ஏற்படும் புது நம்பிக்கையையும் குறித்தது.

பல பண்பாடுகளில் அறுவடை நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கம் இருந்து வந்தது. பொங்கல் விழா அப்படியான ஒரு அறுவடை நாள் கொண்டாட்டமாகும். நல்ல விளைச்சலுக்குக் காரணமாக இருந்து ஞாயிறுக்கு நன்றி சொல்லும் நாளாகவும் பொங்கலுக்கு அடுத்த நாள் வயலை உழுது பயிரிட உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும்  கொண்டாடப்பட்ட.

இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமியர்கள் மொகமது நபி மெக்காவில் இருந்து மெடீனாவிற்கு ஓடிய நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.

கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினாறாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த டிசெம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. பிரித்தானியாவில் ஆண்டுத்தொடக்கம் 12 ஆம் நூற்றாண்டில் இருந்து மார்ச்சு 25 புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது. 1752  ஆண்டு முதலே சனவரி 01 புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது.

கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! உரோம சக்கரவர்த்தி  யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். 

யூலியஸ் சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஓர்  ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. இதனை மாற்றி சனவரி, பெப்ரவரி இரண்டு மாதங்களும் கூட்டப்பட்டு ஓர் ஆண்டு  12 மாதங்கள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது.  கிமு 45 ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.  Quintilis என்ற பெயர் யூலிய சீசரை மேன்மைப்படுத்த  யூலை என்றும் (கிமு 44)  Sextilis  என்ற மாதம் ஓகஸ்ரஸ் சீசரை மேன்மைப்படுத்து முகமாக ஓகஸ்ட் என்று (கிமு 8)  மாற்றப்பட்டது.சீசரின்  நாட்காட்டி அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,581 வரை பயன்பாட்டில் இருந்தது.

ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.

வரலாற்றில் எகிப்தியர்கள்தான் ஞாயிற்றின் ஓட்டத்தை வைத்து முதன் முதலில் ஓர் ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236 இல் கண்டு பிடித்தார்கள். அதனைப் பின்பற்றியே யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பெப்ரபரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணித்தியாலங்கள், 48 மணித்துளிகள், 45.51வினாடிகள் (365.242189) கொண்டது ஆகும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் யூலியன் ஆண்டு 10.8 மணித்துளிகளால் நீண்டுவிட்டது. இந்த நேர வேறுபாட்டால் கிபி 1582 அளவில் 10 நாட்கள் (1582 – 325)/120 =10) அதிகமாகிவிட்டது. இந்த வேறுபாட்டை  போப்பாண்டவர் கிறகோறி ((Gregory)  4 ஒக்தோபர் 1582 க்குப் பின்னர் 15 ஒக்தோபர் 1582  எனக் குறைத்துவிட்டார்.   அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000 இல் கூட்டப்படவில்லை.

அப்படியும் கிபி 4,000 அல்லது கிபி 5,000 ஆண்டளவில் 12 நாள் வேறுபாடு ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் தமிழர்கள் ஆவணி தொடங்கி ஆடி முடியும் வரை உள்ள காலத்தை ஒரு ஆண்டாகக் கணித்தார்கள் என்கிறார். இதனால் சித்திரையை ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளும் வழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். எப்போது ஆண்டுத் தொடக்கம் சித்திரைக்கு மாறியது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாமல் இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழா சித்திரை மாதம் முழுநிலா அன்று கொண்டாடப்பட்டது.

ஞாயிறைப் புவி சுற்றிவரும்போது அதன் அச்சு எப்போதும் வலது பக்கமாக 23½ பாகை சாய்ந்திருக்கும் இதனால் ஞாயிற்றின் கோணம் ஆண்டு முழுதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாறிக் கொண்டே இருக்கும் (The earth’s axis always remains pointing in the same direction as it revolves around the sun. As a result, the solar angle varies at a given place through out the year).  இதுவே பருவங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகும். வட கோளத்தில் கோடை என்றால் தென் கோளத்தில் பனிக் காலமாக இருக்கும். தென் கோளத்தல் கோடை காலம் என்றால் வட கோளத்தில் பனிக் காலமாக இருக்கும். பருவங்களுக்கும் கோள்களுக்கும் இராசிகளுக்கும் தொடர்பில்லை.

புவி தனது அச்சில் சுழலும் போது ஞாயிறு – நிலா இரண்டின் ஈர்ப்பாலும் அச்சில் ஏற்படும் தளம்பலாலும் அதன் வேகம் குறைகிறது. இதனால் புவி தனது பாதையில் (நிரைகோடு) ஆண்டொன்றுக்கு 50.2388475 வினாடிகள் (20 நாடி 14 வினாடி) மேற்குத் திசையில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. 71.6 ஆண்டுகளில் இந்த வேறுபாடு 1 பாகை (கிட்டத்தட்ட ஒரு நாள்) ஆகக் கூடிவிடும். இந்திய பஞ்சாங்கங்களில் கடந்த 1728 ஆண்டுகளாக அயனாம்ச வேறுபாடு திருத்தப்படவில்லை. இதனால் பருவகாலங்கள் பிந்திப் போகின்றன. அயனாம்ச வேறுபாட்டைத் திருத்தி இருந்தால் சித்திரைப் புத்தாண்டு மார்ச்சு 21 ஆம் நாள் கொண்டாடப்பட்டிருக்கும். இது போலவே ஏனைய விழாக்கள் பிழையான திகதியில் கொண்டாடப்படுகின்றன. இன்னும் 11,232 ஆண்டுகளில் புவியின் சமயிரவு பின்னேகல் (Precession of equinox) காரணமாக வேனில் சமயிரவு துலா இராசியில் 0 பாகையில் இடம் பெறும்!

தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4) கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள் ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள் ஆகும்.

பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர்.

இளவேனில் – சித்திரை, வைகாசி

முதுவேனில் – ஆனி, ஆடி

கார் – ஆவணி, புரட்டாதி

கூதிர் – ஐப்பசி, கார்த்திகை

முன்பனி – மார்கழி, தை

பின்பனி – மாசி, பங்குனி)

ஆறு பெரும் பொழுதாகும்.

வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 மணித்துளி  ஆகும்.

‘உவவுமதி’ (முழுமதி) நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.

சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை  நொடி, நாழிகை,  நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன.

சங்க இலக்கியங்களில் எல்லா மாதங்களின் (திங்கங்களின்) பெயர்களும் சொல்லப்படவில்லை. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்;டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது ‘திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன’ எனக் கூறுவதைக் காணலாம். எல்லா மாதங்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் அய்ந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேள்வைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும்.

காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

அரசர்கள் முடிசூடிக் கொண்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த அரசர் 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் எனக் குறிப்பிட்டார்கள். புலவர்களைப் பொறுத்தளவில் பிறந்த இறந்த ஆண்டுபற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

மேலே கூறியவாறு தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடர் ஆண்டு இல்லாதது முக்கிய காரணமாகும் இருக்கிற 60 ஆண்டுகளும் சுழற்சி முறையில் வருவது மேலும் குழப்பத்தை உருவாக்கவே உதவியது. இதனால் வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியவில்லை. ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும்.

இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை ஆகும். இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940)

இந்தியாவில் வெவ்வேறு நிலப்பரப்பை ஆண்ட மன்னர்கள் தங்கள் பெயரில் தொடர் ஆண்டுகளை அறிமுகப்படுத்தினார்கள். கலியுக ஆண்டு, சாலிவாகன சகாப்தம், விக்கிரம ஆண்டு, சக ஆண்டு, கொல்லம் ஆண்டு என்பன இவற்றுட் சிலவாகும்.

விக்கிரம ஆண்டு – விக்கிரமாதித்தன் பட்டம் சூடிய நாளில் இருந்து கணிக்கப்படுகிறது. கிபி 2000 ஆம் ஆண்டு 2058 விக்கிரம ஆண்டுக்கு சமமாகும். விக்கிரம ஆண்டுக் கணிப்பு வட இந்தியாவிலும் குஜராத்திலும் புழக்கத்தில் உள்ளது.

சக ஆண்டு – இது சாலிவாகனன் அரச கட்டில் ஏறிய ஆண்டாகும். கிபி 2000 ஆம் ஆண்டு 1923 சக ஆண்டுக்குச் சமமாகும். சக ஆண்டுக் கணிப்பு தென்னிந்தியாவில் பின்பற்றப்படுகிறது. கிபி 500 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சமற்கிருதத்தில் எழுதிய வானியல் நூல்கள் பெரும்பாலும் சக ஆண்டையே குறிப்பிடுகின்றன. இந்திய அரச நாட்காட்டியும் சக ஆண்டையே பின்பற்றுகிறது.

தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையை வள்ளுவர் தொடர் ஆண்டை அறிமுகப்படுத்தியதின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.முடிந்த மட்டும் அந்தத் தொடர் ஆண்டை நாம் புழக்கத்தில் கொண்டுவர வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்