தமிழ்மக்களின் அபிலாஷைகள் புதிய அரசமைப்பில் உள்ளன! அடித்துக்கூறுகின்றார் சுமந்திரன்

புதிய அரசமைப்பு வராதா என்று சாத்திரக் காரனிடம் கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்லமுடியாது. ஆனால், என்னிடம், இந்த வiரைவு தமிழ்மக்களின் நியாயமான அபிலாஷைகளைப் பிரதிபலிக்கின்றதா என்று கேட்டால் ‘ஆம்’ என்று நான் திடமாகப் பதிலளிப்பேன்.

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

நேற்றுமுன்தினம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ”கருத்துக்களால் களமாடுவோம்” என்ற நிகழ்வில் கருத்துரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை என்பதும் காலத்துக்குக் காலம் மாறுகின்ற ஒன்றுதானே! 1930, 1931 ஆம் ஆண்டுகளில் எஸ்.டபிள்யூ.பண்டாரநாயக்க இங்கு வந்து உங்களுக்கு சமஷ்டி வேண்டுமா என்று கேட்டபோது இல்லை எங்களுக்கு பூர்ணசுவராஜ்யதான் வேண்டும் என்று புறக்கணித்தனாங்கள்தானே.  அந்தநேரத்தில் சட்டசபையிலே யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒருவர்கூட இருக்கவில்லை. ஏனென்றால், ஒருவரும் தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்கள் சமஷ்டி என்றபோது எதிர்த்தோம். பின்னர் 50 க்கு 50 என்றோம். பின்னர் நாங்களே வந்து சமஷ்டி என்றோம். பிறகு தனிநாடு கோரினோம். தனிநாடு கோரிய காலத்திலே எங்களுக்குத் தனிநாடு வேண்டாம் ஒருமித்த நாட்டுக்குள்ளேதான் தீர்வு வேண்டும் என்று நாங்கள் யாராவது இந்த மேடையில் வந்து சொல்லியிருக்க முடியுமா? சொல்லிவிட்டு உயிரோடு திரும்பிப் போயிருக்க முடியுமா? இன்று எங்களுடைய அரசியல் அபிலாஷை மாறிவிடவில்லையா?

இன்றைக்குத் தனிநாடு கேட்கின்றோமா? இல்லையே! காலத்துக்குக் காலம் தீர்வு எப்படியாக இருக்கவேண்டும், தேசம் எப்படியாக இருக்கவேண்டும், நாங்கள் ஒரு மக்களாக அந்த சுயநிர்ணய உரித்தை உபயோகிக்கப்போகின்றோம் என்பவை மாறுகின்றன. அந்த மாறுகின்ற எண்ணத்தையும் நாங்கள் மறந்துவிடக் கூடாது. பழைய காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடாது.

நாங்கள் ஒருமித்த நாட்டுக்குள்ளே வாழத் தயார் என்று சிங்கள தேசத்துக்குச் சொல்லிக்கொண்டு உள்ளே தமிழீழக் கனவோடு வாழக்கூடாது. சொல், செயல், சிந்தனை மூன்றிலும் ஒருமுகப்பட்டவர்களாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் மென்வலு வெல்லும். தனிநாடு கேட்கவில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் ஒரு சொல்லிலே – ஒரு பாணியிலே – வித்தியாசமான ஒன்றை நாங்கள் வளர்த்துக்கொண்டிருப்போம்.  அதனைக் கைவிடவேண்டும். நாங்கள் உண்மையைப் பேசவேண்டும். நேர்மையாக நடக்கவேண்டும். சிங்கள மக்களுக்கு சந்தேகம் இல்லாதவாறு நாங்கள் நடந்துகொள்ளவேண்டும். சிங்கள மக்களுடைய மனதை வெல்லவேண்டும். சிங்களப் பேரினவாதம் இதற்கு இடம்கொடுக்குமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. சந்தேகம். அது பேரினவாதமாக இருக்கின்ற வகையிலே. ஆனால், அது பேரினவாதமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. பல சிங்களக் கிராமங்களுக்கு – ஒரு வருடத்திலே குறைந்தது 10 கிராமங்களுக்குச் சென்றவன் என்ற வகையிலே நான் சொல்கின்றேன். சிங்கள மொழியிலே அவர்களோடு பேசியவன் என்ற வகையில் சொல்கின்றேன். சுயநிர்ணய உரித்தைப் பற்றிப் பேசியிருக்கின்றேன். சமஷ்டியைப் பற்றிப் பேசியிருக்கின்றேன். எவரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

சிங்கள மக்களுக்கு நாங்கள் சொல்லவேண்டிய பிரதான விடயம், அவர்களுக்குரியதை நாங்கள் அபகரிக்கவில்லை. எங்களுக்குரியதை நீங்கள் தடுத்துவைக்கவேண்டாம் என்று கேட்கின்றோம். அவ்வளவுதான். நாடு பிரிந்துவிடும் என்பது அவர்களுக்கு இருக்கின்ற பயங்கரமான பயம். நாடு பிரிவதற்கான சந்தர்ப்பம் தற்போது இல்லை. இதை அவர்கள் தெளியவேண்டும். திரும்பத் திரும்ப நாடாளுமன்றத்தில் சம்பந்தன் ஐயா இதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கின்றார். ஒரு நாட்டுக்குள்ளே, பிழவுபடாத நாட்டுக்குள்ளே தீர்வைக் கேட்கின்றோம் என்று. இப்ப கொஞ்சம் பயமுறுத்தல் தொணியிலும் நாங்கள் பேசுகின்றோம். இப்ப கடைசிச் சந்தர்ப்பம். இதை நீங்கள் தவறவிடுவீர்களாயின் ஒருநாட்டுக்குள்ளே தீர்வு கிடைக்காமல் போகும். அதையும் நாங்கள் சொல்லிக் காட்டுகின்றோம்.

ஆனால், ஒரு நாட்டுக்குள்ளே தீர்வு என்பதை அவர்கள் உணரவேண்டும். அதற்குப் பின்னால் நாங்கள் வேறொரு சிந்தனையை வைத்திருக்கின்றோம் என்ற எண்ணம் அவர்களை விட்டு விலகவேண்டும். இது முழுவதும் எங்களுடைய பொறுப்பு என்று நான் சொல்லவில்லை. ஆனால், எங்களுக்கும் பொறுப்பிருக்கின்றது. மீண்டும் வன்முறையில் நாங்கள் இறங்கமாட்டோம் என்ற செய்தியும் அவர்களைப் போய் சேரவேண்டும்.

இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையிலே இது நடக்குமா நடக்காதா என்ற கேள்வி இருக்கின்றது. அதை நான் கேள்வியாகவே ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், அரசமைப்பில் எதுவும் நடக்கும். உலக அரசியலிலும் அப்படியாக நடந்த காலங்கள் இருந்தன. இங்கும் இருக்கின்றன. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்