மாணவி மீது அதிபர் தாக்குதல் – நீதி கோருகிறார் தந்தை!

வவுனியா ஓமந்தையில் பாடசாலை மாணவி ஒருவர் அதிபரினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை விசனம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தனது மகளுக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதென்றும், ஊடகங்களும் சமூக அமைப்புக்களும் தனது மகளுக்கு நீதியினை பெற்றுத்தரவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா ஓமந்தையில்  அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.

ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரின் பணம் திருட்டுபோன சம்பவம் தொடர்பிலேயே, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி ஓமந்தை பொலிஸாரின் உதவியுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்