கல்வி என்பது திணிக்க கூடிய ஒன்றாக இருக்க கூடாது: ஞா.சிறிநேசன்

கல்வி என்பது திணிக்க கூடிய ஒன்றாக இருக்கக்கூடாது என்பதுடன் மாணவர்களது நிலையை கணிப்புச் செய்து அதற்கு ஏற்ற வகையில் வழங்கப்படுன்ற பொறிமுறையாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் – கல்முனை, கார்மேல் பற்றிமா கல்லூரியில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் முகமாக புதுமுக புகு விழா நடைபெற்றுள்ளது.

இவ்விழா இன்று காலை கல்லூரி முதல்வர் அருட்தந்தை செபமாலை சந்தியாகு தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மாணவர்களது திறமைகளை, இயலுமைகளை கணக்கில் கொண்டு ஆற்றல்களை இணங்காண முடிந்தால் மாத்திரமே சிறந்த வளவாளர்களாக உருவாக்க முடியும்.

மாணவர்களது இயலுமை என்ன? அவர்களால் என்ன செய்ய முடியும்? என அறிந்து வளர்த்தெடுப்போமானல் பல்வேறுபட்ட துறைகளில் வல்லுனர்களை உருவாக்க முடியும்.

புகழ்பூத்த கல்லூரியான கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் கல்வி கற்பது என்பது அனைவரதும் கனவு. நீங்கள் பாக்கியசாலிகள்.

ஆசிர்வதிக்கப்பட்ட பற்றிமா கல்லூரியில் இணையும் போதே மாணவர்களும் ஆசீர்வதிக்கப்படுகின்றனர்.

இதுவே சாதனைகளுக்கு களமாக அமைகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்விற்கு விஷேட அதிதிகளாக ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ். சாந்தகுமார், கிராமிய அபிவிருத்தி வங்கியின் கிழக்கு மாகாண நிதி திட்டமிடல் பணிப்பாளர் சத்தியநாதன், கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் என்.ரமேஷ் மற்றும் சர்வ மத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் நிகழ்வின் கதாநாயகர்களாக முதலாம் தர மாணவர்கள் திகழ்ந்ததுடன் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர்கள் என நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்