மத்தலவுக்கு சீனாவிடம் பெற்ற கடனை இந்தியா மூலம் அடைப்போம் – சிறிலங்கா பிரதமர்

மத்தல விமான நிலையத்தை அமைப்பதற்காக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் சீனாவிடம் பெறப்பட்ட கடன், இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையின் உதவியுடன் மீளச் செலுத்தப்படவுள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒக்ரோபர் 26ஆம் நாள் உருவாக்கப்பட்டு 51 நாட்கள் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் நாட்டுக்குப் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ராஜபக்சவினரால் உருவாக்கப்பட்ட கடன்சுமையை, அம்பாந்தோட்டை துறைமுக கடன் அடைக்கப்பட்டது போல, புதிய அரசாங்கம் தீர்த்து வைக்கும்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மத்தல விமான நிலையத்தை அமைப்பதற்காக சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடனை அடைப்பதற்கு, இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையின் உதவி கோரப்பட்டுள்ளது.

போர் முடிவுக்கு வந்த பின்னர் அக்குரேகொடவில்,  பாரிய பாதுகாப்பு தலைமையக கட்டடத்தை கட்டுவதற்கும், சிறிலங்கன் விமான சேவைக்கு   தேவையின்றி விமானத்தைக் கொள்வனவு செய்வதற்கும் பில்லியன் கணக்கான ரூபா செலவிடப்பட்டது.

அதற்குச் செலவிடப்பட்ட நிதியை கல்வி, சுகாதாரம் போன்ற அவசிய தேவைகளுக்கு செலவிட்டிருந்தால், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைத் தவிர்த்திருக்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்