லக்ஸ்மன் கதிர்காமர் கொலை – புலிகள் இயக்க உறுப்பினர் ஜேர்மனியில் கைது

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏபி செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு ஜேர்மனியில் நேற்றுமுன்தினம் அவர் தங்கியிருந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை அடுத்தே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் பெயர், ஜி.நவநீதன் என்று அந்த நாட்டு சட்டத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

எனினும், ஜேர்மனியில் உள்ள தனிப்பட்ட உரிமை குறித்த சட்டங்களுக்கு அமைய, அவரது முதற்பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு ஒன்றில் உறுப்பினர் என்றும், படுகொலை மற்றும் படுகொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2005 ஆம்  ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையில் பங்கெடுத்தார் என்றும், ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாலைப் படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் என்றும் ஜேர்மனி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எவ்வளவு காலம் ஜேர்மனியில் தங்கியிருந்தார் என்ற தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்