பொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்!

பொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு மற்றும் வடக்கு ஊடகங்கள் மீது சீறிப் பாய்ந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

ஊடகங்கள் எப்பவும் உண்மையை எழுதவேண்டும். ஆனால், இங்கு ஊடகங்கள் நாங்கள் கூறுவனவற்றைத் திரித்து எழுதுகின்றார்கள். தென்னிலங்கையில் ஓர் ஊடகம், நான் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தெளிவாகத் தெரிவித்தேன் ”புதிய அரசமைப்பில் ஈடுபடும்போது எமக்குத் தமிழீழக் கனவு இருக்கக்கூடாது. இதயசுத்தியுடன் மனதுக்குள்ளே ஓர் எண்ணத்தை வைத்துக்கொண்டு செயற்படக்கூடாது. சிங்கள மக்கள் எங்களை முழுமையாக நம்பவேண்டும்” என்றேன். இந்த ஊடகம் (சுமந்திரனின் உரைக்கு முன்னால் வைக்கப்பட்ட மைக்கைத் தட்டிக் காட்டி கூறுகின்றார்) நான் சொன்ன அந்த விடயத்தை அப்படியே தலைகீழாக மாற்றி, ”புதிய அரசமைப்பில் தனிநாட்டுக்கான – தமிழீழத்துக்கான – கோரிக்கையும் உண்டு” என்று செய்தி சிங்களத்தில் வெளியிட்டுள்ளது.  அவ்வாறு செயற்படும் ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். இதனால்தான் இவற்றைக் கறுப்பு ஊடகங்கள் என்றேன்.

தென்னிலங்கை அரசியல் வாதிகள் மக்களைக் குழப்புவதற்காக ஒவ்வொரு பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றார்கள். புதிய அரமைப்பு வந்தால் நாடு 9 ஆகப் பிழவுபடப்போகின்றது என்றுகூடக் கூறுகின்றார்கள். ஊடகங்களும் அவர்களுக்கேற்றாற்போல் மக்களைக் குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

உண்மையைக் கூறவேண்டும்,. நான் தேர்தலுக்கு முன்னர் கஜேந்திரகுமாருடன் நடந்த விவாதத்தில் சொன்னேன் புதிய அரசமைப்பில் சமஷ்டி இருக்காது அதிலுள்ள குணாம்சங்கள்தான் இருக்கும் என்று இன்று அதைத்தான் – அப்ப என்னால் கூறப்பட்டவற்றைத்தான் – புதிய அரசமைப்பில் கொண்டுவந்துள்ளோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்