வைத்தியர் சத்தியலிங்கத்தின் முயற்சியால் வவுனியா பல்கலை தனி பல்கலைகழகமாக!

வவுனியா வளாகம் மாசி மாதமளவில் தனிப் பல்கலைக்கழகமாக மாறும் என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா வளாகம் ஆரம்பிக்கபட்டு 28 வருடங்கள் முடிவடைந்து விட்டன. இந்த வளாகம் ஆரம்பிக்கபட்ட சமகாலத்தில் உருவான வளாகங்கள் எல்லாம் தற்போது சுயாதீன பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இதனை சுயாதீனமான பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு பலரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

பல்கலைக்கழகமாக மாற்றபடும் என்று பாராளுமன்றத்திலும் தெரிவிக்கபட்டிருந்த நிலையில் தொடர் நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளபடவில்லை.

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு சில தடைகள் இருக்கின்ற போதும் அடிப்படைக் காரணமாக வளாகத்திலே காணப்படும் கட்டுமான வசதிகள் போதாத நிலைமை இருக்கிறது.

எனவே இவ்விடயங்கள் தொடர்பாக உயர்கல்வி அமைச்சருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தோம்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான், வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் ஆகியோரும் குறித்த சந்திப்பில் என்னுடன் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பில் வவுனியா வளாகத்தில் தற்போது இரண்டு பீடங்கள் மாத்திரமே இருக்கின்றன.

அதனை அதிகரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், வவுனியா வளாகத்தை சுயாதீனமான பல்கலைக்கழகமாக மாற்றுவதென்றும், ஏற்கனவே இருக்கும் கற்கை நெறிகளை அதிகரிப்பதுடன் குறைந்தது நான்கு பீடங்களை கொண்ட பல்கலைக்கழகமாக மாற்றுவதென்றும் முடிவு காணப்பட்டது.

அநேகமாக எதிர்வரும் மாசிமாதம் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று எமக்கு தெரியப்படுத்தபட்டுள்ளது.

பிரதமருடனும் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அவரும் அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்திருந்தார் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்