தமிழக அறிஞர் பலரின் பங்கேற்புடன் நல்லூரில் சிலப்பதிகார விழா – இன்று கோலாகல ஆரம்பம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு தமிழ்ஐயா கல்விக் கழகமும் தமிழ் ஆடற்கலை மன்றமும் இணைந்து நடத்தும் இருநாள் சிலப்பதிகார முத்தமிழ் விழா இன்று (18.01.2019) வெள்ளிக்கிழமை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில்  கோலாகலமாக ஆரம்பமாகியது. தமிழகத்தில் இருந்து விழாவிற்கென வருகை தந்த 25 பேராசிரியர்கள் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தாரால் நல்லூர் கந்தசுவாமி கோவில் வாயிலில் இருந்து நாகதீபன் குழுவினரின் மங்கல இசையுடன் அழைத்துவரப்பட்டனர். வரவேற்பு ஊர்வலத்தில் இந்தியத் துணைத்தூதுவர், நல்லை ஆதீன முதல்வர் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
காலை அமர்வு
இன்று காலை 9 மணிக்கு  யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது காலை அமர்வில் யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழக மாணவர்கள்  தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தனர்.. யாழ். பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கிருபாசக்தி கருணா சிலப்பதிகார வாழ்த்து இசைத்தார்.  தமிழ்ச்சங்கச் செயலாளர் இ.சர்வேஸ்வரா வரவேற்புரையையும் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரையையும் இந்தியத் துணைத்தூதர் சங்கர் பாலச்சந்திரன் வாழ்த்துரையையும் வழங்கினர்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர் முனைவர் சு.நரேந்திரன் சிறப்புரையாற்றினார்.. திருவையாறு அரசர் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் செல்வகணபதி தலைமையில் சிலப்பதிகாரக் காப்பியமும் கதைமாந்தரும் என்ற தலைப்பில் மகளிர் அரங்கு இடம்பெற்றது. இதில் வசந்தமாலை என்ற பொருளில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் எப்.தீபாவும் கவுந்தியடிகள் என்ற பொருளில் தமிழ்ப்பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் எஸ்.கற்பகமும் மாதரி என்ற பொருளில் தமிழ்ச்சங்க உபதலைவர் முனைவர் மனோன்மணி சண்முகதாசும் கருத்துரைகளை வழங்கினர்.
காலை அமர்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரிய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாலை அமர்வு
மாலை அமர்வு இன்று (19.01.2019) பிற்பகல் 4.30 மணிக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெறுகிறது. நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் சிலப்பதிகார வாழ்த்தை யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவன் ஜெ.மதுசிகன் இசைக்கிறார். தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் ந.ஐங்கரன் வரவேற்புரையையும்  கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் வாழ்த்துரையையும் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தொடக்கவுரையையும் ஆற்றுகின்றனர். சென்னை சுருதிலயா வித்தியாலய முதல்வர் முனைவர் பார்வதி பாலச்சந்திரன், மதுரை பாத்திமா கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் க.சரஸ்வதி ஆகியோர் பங்கேற்கும் இசையரங்கம், யாழ். கலாகேந்திரா நடனப்பள்ளி இயக்குநர் முனைவர் கிருஷாந்தி இரவீந்திராவின் நெறியாள்கையில் நாட்டிய அரங்கம் என்பன இடம்பெறுகின்றன.
விழா நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்குக் காலை அமர்வாகவும் மாலை 4.00 மணிக்கு மாலை அமர்வாகவும் இடம்பெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்