உலகின் தொன்மையான தமிழை அவமதிக்கும் நோக்கம் கிடையாது! – அமைச்சர் மனோவிடம் சீனத் தூதுவர் தெரிவிப்பு

“இலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ்மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகின்றோம். இந்நிலையில், இலங்கையில் இடம்பெறும் சீன அபிவிருத்தி மற்றும் தொழிற்திட்டங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ்மொழியை திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கம் கிஞ்சித்தும் எமக்கு கிடையாது. இனிமேல் சீன நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் இலங்கையில் அமைக்கப்படும்போது உங்கள் அமைச்சுடன் கலந்து பேசி அவற்றை அமைக்க எங்கள் வர்த்தகப் பிரிவு அதிகாரியை நான் நியமிக்கின்றேன்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணி – ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்துசமய விவகார அமைச்சர் மனோ கணேசனிடம், இலங்கையிக்கான சீனத் தூதுவர் செங் யுவான் தெரிவித்துள்ளார்.

சீனத் தூதுவரின் அழைப்பை ஏற்று கொழும்பிலுள்ள அவரது இல்லத்துக்கு அமைச்சர் மனோ கணேசன் இன்று சென்றார். அமைச்சருடன் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சந்திரசேகரம், பணிப்பாளர் மதிவதனன் ஆகியோரும் சென்றனர்.

இந்தச் சந்திப்பின்போதே சீனத் தூதுவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள சீன தொழில் முயற்சி திட்ட வளாகங்களில், இலங்கையின் மொழிக்கொள்கை பின்பற்றப்படுவதில்லை. விசேடமாக தமிழ் மொழி புறக்கணிப்புக்கு உள்ளாகின்றது என்ற புகார் சமீப காலங்களில் மேலெழுந்துள்ளது. இவை பற்றி சீனத் தூதுவரை சந்தித்து நேரடியாகக் கலந்துரையாட விரும்புவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சு, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்துக்கு அறிவித்தது.

அதையடுத்து, அமைச்சர் மனோ கணேசனை தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருகை தரும்படி சீனத் தூதுவர் செங் யுவான் விடுத்த அழைப்பை அமைச்சர் மனோ கணேசன் ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது சீனத் தூதுவர், அமைச்சர் மனோ கணேசனிடம் கூறியதாவது,

“இலங்கை மக்களுடனான சீன நாட்டின் உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ்மொழி பேசும் மக்களையும் எமது உறவு வலயத்தில் வைக்கவே நாம் விரும்புகின்றோம். இந்நிலையில், இலங்கையில் இடம்பெறும் சீன அபிவிருத்தி மற்றும் தொழில் திட்டங்களின் பெயர்ப்பலகைகளில் உலகின் தொன்மையான ஒரு மொழியான தமிழ்மொழியைத் திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கம் கிஞ்சித்தும் எமக்குக் கிடையாது.

இதுவரை அமைக்கப்பட்டுள்ள தொழில் திட்டங்களின் பெயர்ப்பலகைகளில் இருக்கின்ற எழுத்து பிழைகள் அல்லது மொழிப் புறக்கணிப்பு போன்றவை படிப்படியாக திருத்தப்படும். அவற்றுக்கு மொழிபெயர்ப்பு போன்ற விடயங்களுக்கு நாம் உங்களை நாடுகின்றோம்.

இனிமேல் சீன நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் அமைக்கப்படும்போது உங்கள் அமைச்சுடன் கலந்து பேசி அவற்றை அமைக்க எங்கள் வர்த்தகப் பிரிவு அதிகாரியை நான் நியமிக்கிறேன்” என்று கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நீங்கள் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் ஒரு சிரேஷ்ட தலைவர் என்பதும், இந்நாட்டின் வாழும் இனங்களுக்கு இடையிலான தேசிய சகவாழ்வுக்கு நீங்கள் பாரிய பங்களிப்பை வழங்கி வருவதையும் நாம் அறிவோம். உண்மையில் எங்கள் தூதரகப் பணியாளர் மற்றும் இங்கு வரும் சீனப் பிரஜைகள் இனிமையான தமிழ்மொழியைக் கற்க ஆர்வம் காட்டுகின்றார்கள். அவர்களுக்கு உதவிட நான் உங்களைக் கோருகின்றேன். இலங்கையின் இனங்களுக்கு இடையிலான தேசிய சகவாழ்வுக்கு எம்மால் அளிக்கக்கூடிய உதவிகளை நீங்கள் கோரினால் வழங்க நாம் தயார்” என்று கூறினார்.

தூதுவருக்குப் பதிலளித்த அமைச்சர் மனோ கணேசன்,

“சீன மொழியைப் போன்று தமிழ் மொழியும் உலகின் தொன்மை வாய்ந்த மொழிகளில் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியும். சீனத் தொழில் திட்டங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ்மொழிப் புறக்கணிப்பு தமிழ் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் சிங்களம், தமிழ் ஆகியவை தேசிய அரசகரும மொழிகள். ஆங்கிலம் இணைப்பு மொழியாகும்.

எனது அமைச்சின் அரச கரும மொழிகள் திணைக்களத்தில் எமது தேசிய மொழிகளுடன் ஆங்கிலம், ஹிந்தி, சீன, ஜேர்மன், கொரிய, பிரெஞ்ச், ஜப்பானிய மொழிகளும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்நிலையில், வெளிநாட்டு மொழிகளை மதிக்கும் எமக்கு எமது மொழி மதிக்கப்படாமை வேதனையைத் தருவதை நீங்கள் புரிந்து கொண்டதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இது விடயமாக உங்கள் அதிகாரியுடன் கூட்டாக செயற்பட அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மதிவதனை நான் உடனடியாக நியமிக்கின்றேன். உங்கள் தூதரகப் பணியாளர்களுக்கும், சீனத் தொழிலாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இலங்கை மொழிகளைக் கற்றுக்கொள்ள அவசியமானால், அவரைத் தொடர்பு கொள்ளுங்கள். அவற்றுக்கு நாம் ஆவன செய்வோம்” என்று கூறினார்.

இதன்போது அமைச்சரால், இலங்கையின் மொழிச் சட்ட விபரக்கோவை, சீனத் தூதுவருக்கு வழங்கப்பட்டது. சீனத் தூதரகத்தால் அமைச்சருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்