வவுனியா நகரசபையின் பத்தாவது அமர்வு!! பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆராய்வு!!

வவுனியா நிருபர்
வவுனியா நகரசபையின் உறுப்பினர்களின் பத்தாவது அமர்வு நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (18) நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
காலை 9.30 மணிமுதல் மதியம் 12.30. மணிவரை நகரசபை உறுப்பினர்களால் பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்றது.
முக்கியமாக நகரப்பகுதிகளில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்றுவதில் நகரசபையின் அசமந்தப்போக்கு குறித்தும் சுகாதாரத் தொழிலாளர்களின் பற்றாக்குறை குறைத்தும் விவாதிக்கப்பட்டதுடன் அண்மையில் வவுனியா நகரத்தின் புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக மதுபானசாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாகவும் அதற்கு எவ்வாறு நகரசபை அனுமதி வழங்கியது என நகரசபை உறுப்பினர் த.பரதலிங்கம் தவிசாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த நகரசபை தவிசாளர் இ.கௌதமன் மதுபானசாலைக்கு அனுமதி அளித்தது மதுவரித்திணைக்களம் என பதிலளித்திருந்தார். அத்துடன் மதுபானசாலை அமைப்பதற்கு கடை வழங்கிய கட்டிட உரிமையாளர் அருகில் மாணவர்களின் மேலதிக வகுப்பிற்கு கட்டிடத்தை வாடகைக்கு வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
நடிகரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆருக்கு வவுனியா நகரத்தின் மையப்பகுதியில் சிலை அமைப்பது தொடர்பாக நகரசபை உறுப்பினர் ரி.கெ.ராஜலிங்கம் அவர்களினால் முன்மொழிவு ஒன்று வாக்கெடுப்புக்காக சபையில் முன்வைக்கப்பட்டது.
குறித்த முன்மொழிவானது நகரசபை தவிசாளரினால் சபையின் முடிவிற்கு விடப்பட்ட நிலையில் 21 உறுப்பினர்களை கொண்ட சபையில் 18 உறுப்பினர்கள் ஆதரவாகவும் பாஸ்கரன் ஜெயவதனி மற்றும் சமந்தா செபநேசராணி ஆகிய இருவர் எதிராகவும் ஒருவர் சமூகமளிக்காத நிலையில் தீர்மானம் பெரும்பான்மை பெற்றதன் காரணமாக எம்.ஜி.ஆருக்கு சிலை அமைக்க அனுமதி வழங்குவது என தீர்மானம் எடுக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்