தாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்!

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிய மகனுக்கு, சற்றும் யோசிக்காமல் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தின் வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. மூன்று வெள்ளாடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட சிறு வீடும்தான் அவரது சொத்து.

வறுமை நிரந்தரமாக இவரது வீட்டில் குடியிருக்கிறது. மகன் குமார் சென்ட்ரிங் வேலைக்குச் செல்கிறார். அதுமட்டும்தான் ஜீவனம். குமாருக்கு திருமணமாகி ரேணுகா என்ற மனைவியும் 4 வயதில் ஹாசினி என்ற மகளும் உள்ளனர்.

குமாருக்கு திடீரென உடல்நிலை குன்றிய நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு சிறுநீரகங்களும் முழுவதுமாக பழுதடைந்து விட்டதாகவும் சிறுநீரகம் தானமாகக் கிடைத்தால் மட்டுமே அவரது உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும் சொல்லிவிட்டார்கள்.

மொத்தக் குடும்பமும் இடி விழுந்த ஓடாக நொறுங்கிப்போனது. தன் மகனை மீட்கத் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்க முடிவு செய்தார் சுப்புலட்சுமி. அவரது வலதுபக்க சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டு குமாருக்குப் பொருத்தப்பட்டது. தற்போது உயிர் மீண்டிருக்கிறார் குமார்.

இது குறித்து சுப்புலட்சுமி கூறுகையில், என் மகனுக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யனும் என மருத்துவர் கூறினார். அதைக் கேட்டதும், நான் கொஞ்சமும் யோசிக்கலை. நான் தர்றேன் டாக்டர்’னு என்னையறியாம கத்திட்டேன். கடவுள் புண்ணியத்துல என் சிறுநீரகம் அவனுக்கு எல்லா வகையிலும் பொருந்திப் போச்சு. என் மகனே, நீயெல்லாம் தரவேண்டாம்மா’ன்னு சொன்னான்.

அக்கம்பக்கத்துல உள்ளவங்ககூட, உன் மகனாவே இருந்தாலும், உன் சிறுநீரகத்தை தரலாமா?’ன்னு என்னென்னவோ சொல்லி, என் மனசைக் கலைக்கப் பார்த்தாங்க. ஆனா, வாழ்ந்து முடிச்ச பெண் நான். என் மகன் வாழ வேண்டியவன்’னு வைராக்கியமா இருந்துட்டேன்.

நான் இவனைப் பெத்தப்ப அடைஞ்ச சந்தோஷத்தைவிட, இப்போதான் அதிகமா சந்தோஷப்படுறேன் என்று குரல் உடைந்து கண்ணீர் சிந்துகிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்