புலிகள் பயங்கரவாதிகள் என்றால் அவர்களை அழிக்க அரசு நடந்துகொண்ட முறையும் ஒருவித பயங்கரவாதம் தான் – சுமந்திரன்

ஹிரு தொலைக்காட்சி நேர்காணலில் சுமந்திரன் எம் பி கருத்துக்கள் – ;

ஒருமித்த நாடு இல்லாவிட்டால் ஒன்றுபட்ட நாடு !

“விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஒரு சீட் கூட கிடைக்காது. அவர் எங்களுக்கு ஒரு சவால் அல்ல.

புலிகளை தோல்வியடையச் செய்ய நான் ஒரு போதும் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த பெயரில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்டனர். தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்சவை வெறுப்பதற்கு அதுவும் காரணம்.

புலிகள் பயங்கரவாதிகள் என்றால் அவர்களை அழிக்க அரசு நடந்துகொண்ட முறையும் ஒருவித பயங்கரவாதம் தான்.

வடக்கு மாகாண சபை முறையாக இயங்கவில்லை. அதனை நான் ஏற்கிறேன்.இனி அதனை நாங்கள் சரியாக கையாள்வோம்.

புதிய அரசியலமைப்பு வராது. நீங்கள் வீணாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எங்கள் தரப்பில் என் மீது விமர்சனங்கள் செய்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வந்தாக வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.

ஒற்றை ஆட்சி என்றால் ஒரு இடத்தில் ஆட்சி நிர்வாகம் இருக்கும். அப்படியானால் எப்படி நீங்கள் அதிகாரத்தை பகிர்வீர்கள்? நாட்டை பிரிக்காமல் ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரத்தை பகிருங்கள். அதையே கூறுகிறோம்.ஒருமித்த நாடு அல்லது ஒன்றுபட்ட நாடு என்று கூறலாம் என்று நான் யோசனை முன்மொழிந்தேன்.அதில் ஒருமித்த நாடு என்று குறிப்பிடுவது நல்லதென தீர்மானித்தார்கள்.

தெற்கில் மட்டுமல்ல வடக்கிலும் இது புரியாமல் உள்ளது. சமஷ்டி இல்லையென ரெலோ என்ற எங்களின் பங்காளிக்கட்சி கூட நேற்று எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. நாட்டை பிரிக்க கூடாது அந்த சிந்தனை இருக்கக் கூடாதென நான் மக்களிடம் சொல்கிறேன். இதே சில வருடங்களுக்கு முன்னர் நான் யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தால் பின்னர் எப்படி திரும்பி வந்திருப்பேன்? மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும்.

அரசியலமைப்பு என்பது சமூக ஒப்பந்தம். அதனால் தான் அனைவரின் இணக்கம் இதற்கு தேவையென கருதப்படுகிறது.இவ்வளவு பிரச்சினைகள் உயிரிழப்புக்கள் சேதங்களுக்கு பின்னர் வடக்கு கிழக்கு மக்கள் இன்னமும் ஏன் சமஷ்டி கட்சிக்கு ஆதரவளிக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் தீர்வு தேவை . அவர்களுக்கு பிரச்சினை இல்லையென நினைக்காதீர்கள். இது முக்கியமா என்று கேட்பதும் பிழை. அரசியலமைப்பை எங்களால் செய்ய முடியாமல் போனால் எமக்கெதிரான சக்திகள் தலை தூக்கும்.”

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்