சீனாவுக்கான கனேடிய தூதுவர் பதவிநீக்கம்!

சீனாவிற்கான கனேடிய தூதுவர் ஜோன் மக்கலமை, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அதிரடியாக பதவிநீக்கியுள்ளார்.

சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவியின் நிதியியல் தலைமையதிகாரி மெங் வான்சூ கனடாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவர், அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மக்கலம் வெளியிட்ட முரண்பாடான கருத்துக்களை தொடர்ந்தே இந்த பதவிநீக்கம் இடம்பெற்றுள்ளது.

எனினும், மக்கலமை பதவி விலகுமாறு கோரியதாகவும், அவர் பதவி விலகாத காரணத்தால் பதவிநீக்கம் செய்ததாகவும் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, அவரும் அவரது குடும்பத்தாரும் நாட்டிற்கு வழங்கிய சேவைக்காக நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, மெங் வான்சூவின் நாடுகடத்தல் தொடர்பாக பொதுவெளியில் மக்கலம் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அமெரிக்காவின் கோரிக்கை மிகவும் பாரதூரமானதென குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்த ஒரு செய்திக்குறிப்பில், நாடுகடத்தல் கோரிக்கையை அமெரிக்கா கைவிட்டால் அது கனடாவிற்கு சிறந்ததென குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி கனடாவில் கைதுசெய்யப்பட்ட ஹூவாவி அதிகாரி, தீவிர கண்காணிப்பின் கீழான பிணையில் உள்ளார். அவரை விடுவிக்குமாறு சீனா கோரி வருகின்ற நிலையில், அவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளார்.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்