எக்கய ராட்ஜியவை ஏற்ற கூட்டமைப்பு ஒற்றையாட்சியை ஏற்கவில்லை– உதய கம்மன்பில

ஒற்றையாட்சி அரசு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

”புதிய அரசியலமைப்பு வரைவு இன்னமும் உருவாக்கப்படவில்லை என்றும், ஒற்றையாட்சிக் கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கூறியிருக்கிறார்.

துரதிருஷ்டவசமாக, பிரதமர் ரணில், நாட்டை ஏமாற்ற முயற்சிக்கிறார்.

அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தின் முதல் பக்கத்தில், ‘இந்த அரசியலமைப்பு’ என்ற சொற்றொடரைக் காணலாம் என்று சுட்டிக்காட்டினோம்.

இந்த வரைவை உருவாக்கிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்த ஆவணம் அரசியலமைப்பு வரைவு தான் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.

எம்முடனான தொலைக்காட்சி விவாதத்தில் அவர்,  ஒற்றையாட்சி அரசை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

தமது சொந்த வியாக்கியானத்தின் அடிப்படையில் தான் அவர்கள் ‘ஏக்கிய ராஜ்ய’ என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, கூட்டமைப்பு, ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு விட்டது என்று யாரும் கூற முடியாது.

சமஷ்டிப் பண்புகளுடன் தான் புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை ஏற்றுக் கொண்ட சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் நாங்கள் நன்றி கூற வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்