04 பெப்ரவரி 2019 – 71 ஆவது ஆண்டை எதற்காகக் கொண்டாடுகிறீர்கள்?

04 பெப்ரவரி 2019 – 71 ஆவது ஆண்டை எதற்காகக் கொண்டாடுகிறீர்கள்?

சார்மினி சேரசிங்கி

சிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர் மங்கள சமரவீராவுக்கு எழுதும் பகிரங்க மடல்

அன்புள்ள அமைச்சர் மங்கள சமரவீர அவர்கட்கு,

உங்களை மாண்புமிகு அமைச்சர் என விளிக்கப் படாததையிட்டு கவலைப்பட மாட்டீர்கள் என நம்புகிறேன். காரணம் உங்களைத் தெரிந்த என் போன்றவர்களுக்கு நீங்கள் ஏற்கனவே மாண்புமிகு என்பதால் அது பற்றி நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை.

குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக உங்களுக்கு மேன்முறையீடு செய்வதற்கு நான் முடிவு எடுத்ததற்குக் காரணம் பிரதமர் போலல்லாது – அவர் எப்போதும் தலையை நிரந்தரமாக ஆகாயத்தில் வைத்துக் கொண்டிருப்பவர் – எங்களது “முதன்மை வேலையாள்” என வெட்கமில்லாமல் தொடர்ந்து மாறுவேடம் அணிந்து திரிபவர் போலல்லாது எனது நண்பராகிய நீங்கள் உங்கள் தலையைச் சரியாக திருக்கி வைத்திருப்பவர். அதற்கும் மேலாக, உங்களுக்கு மனட்சாட்சி என்ற ஒன்று இருக்கிறது. எனவே எனக்கு உங்களிடம் அபரிமிதமான நம்பிக்கை இருக்கிறது. எங்களது நாட்டு மக்களுக்கு எது சரியோ அதைச் செய்யுங்கள்.

இப்போது தொடருகின்றேன்!

அடுத்த கிழமை, தங்கள் இன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ள பிரித்தானியர் எங்களது நாட்டைவிட்டுத் தப்பியோடி 71 ஆண்டுகள் கழிந்துவிட்டதை சிறிலங்கா கொண்டாட இருக்கிறது. இந்த 71 ஆண்டுகளாக நாட்டு மக்களாகிய எங்களை இரண்டு ஆதிக்க அரசியல் கட்சிகளின் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் எம்மை ஏமாற்றிவிட்டன, எம்மைப் பயன்படுத்திவிட்டன, எம்மைப் பேய்க்காட்டிவிட்டன. எம்மை மோசம் செய்துவிட்டன. இன்று நாட்டைக் கடனாளியாக்கி இருண்ட துளைக்குள் தள்ளி விட்டுவிட்டன. நிதி அமைச்சர் என்ற முறையில் அந்தத் துளை எவ்வளவு ஆழமானது, இருளானது என்பது உங்களுக்கு மிக நுட்பமாகத் தெரியும்.

மங்களா, நீங்கள் ஒரு விவேகமான, புத்திசாலி மனிதர் என்றமுறையில் சிறிலங்கா மக்களாகிய எங்களுக்கு பெப்ரவரி 04 உள்ளபடி ஒரு துக்கநாள் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்! பிரித்தானியர் எங்களது நாட்டைவிட்டுத் தப்பியோடு 71 ஆண்டுகள் கழிந்துவிட்டது. அதனை நாம் “சுதந்திரநாள்” என அழைக்கிறோம். ஆனால் இன்று நாங்கள் எங்கே நிற்கிறோம்? சிறிலங்காவின் மக்களாகிய நாங்கள் உண்மையில் எதனையும் சாதிக்க முடியவில்லை. உண்மையில் நாங்கள் ஆதாயம் அடைந்ததைவிட பல மடங்கு இழந்து விட்டோம்.

கடந்த 71 ஆண்டுகளாக, நாங்கள், எங்களது பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் வாக்களித்த அரசியல்வாதிகள் மட்டுமே பயன் அடைந்துள்ளார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? எங்களது மக்களை மொழி, இன, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அனைவரையும் துருவப்படுத்தி விட்டார்கள். அதன் மூலம், எங்களது வாழ்வில் ஒரு முழுமையான குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அது இறுதியில் எமது மக்கள் இடையிலேயே ஒரு போருக்கு இட்டுச் சென்றது. சரி, இப்போது அது வரலாறாகிவிட்டது. மேலும், நாங்கள் வாக்களித்து அதிகாரத்தில் அமர்த்திய அரசியல்வாதிகள்- எங்களது வேலையாட்கள் – என்ன செய்தார்கள்? எங்களது செலவில் தங்களையும் தங்களது குடும்பங்களையும் தங்களுக்குத் துதிபாடுபவர்களையும் கவனித்துக் கொண்டார்கள். இந்த நாட்டில் – தேரவாத பவுத்தத்தின் தொட்டிலான நாட்டில் – புத்த சாசனத்தை பயன்படுத்தினார்கள் – தவறாகப் பயன்படுத்தினார்கள் – இளித்தவாய் சிங்களவர்களை இனவாத முட்டாக்கள் ஆக்கினார்கள் – மற்றவர்கள் பார்வையில் கோமாளிகளாக இருத்திவிட்டார்கள் – எங்களது பழமையான புனிதமான விழுமியங்களை அழித்தார்கள். பவுத்த சமயக் குருமாரை அழுக்காக்கி விட்டார்கள், பிரிவினையை உருவாக்கினார்கள், இன மற்றும் மத வேற்றுமையை உருவாக்கினார்கள், எங்களது இளையோரை – நாட்டின் நாளைய சந்ததியினரை – மூளைச் சலவை செய்து இனவாதம் பேசும் சிங்கள – பவுத்த கோட்பாட்டர்களாக உருமாற்றினார்கள். அவர்களை பண்பாட்டில் கவ்வைக்குதவானவர்களாகவும் நடத்தையில் இழிந்தவர்களாகவும் ஆக்கிவிட்டார்கள்.

இதையா நாம் பெப்ரவரி 4 இல் கொண்டாடப் போகிறோம்?

இந்த நாளில் – பெப்ரவரி 04 – ‘சுதந்திர நாள் கொண்டாட்டங்கள்’ என ஆண்டுதோறும் நடக்கிற கண்காட்சியைக் காணப் போகிறோம். முடிவில் இதற்கான செலவை சிறிலங்கா மக்களாகிய நாங்கள்தான் செலுத்தப் போகிறோம். நாங்கள் வாக்களித்து அதிகாரத்தில் அமர்த்திய எங்களது “வேலையாட்களின்” அகங்காரத்தை உயர்த்த எங்களது பணத்தை அறிவற்ற முறையில் செலவு செய்யப் போகிறோமா? இல்லை, நாங்கள் செய்யப் போவதில்லை!

இந்தக் கண்காட்சியில் நட்சத்திர வித்தைக்காரர் எங்களது “தலைமை வேலையாள்” துரோகி மயித்திரிபால சிறிசேனாதான். அரசியல் யாப்பை மீண்டும் மீண்டும் வெளிப்படையான தண்டனைக்குப் பயமின்றி அத்துமீறிய அவரை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் போட்டு சிக்காராக மூடியிருக்க வேண்டும். மொத்தம் 6.25 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்து தெரிவு செய்த அரசியல் அற்ப மனிதரொருவர் ஒக்தோபர் 26, 2018 அன்று எங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார். அப்படிப்பட்ட நம்பிக்கைத் துரோகி ஒருவரது, அரசியல் அற்பரான ஒருவரது தன்முனைப்பை ஊக்குவிப்பதற்கு எங்களது பணத்தைச் செலவழிக்கப் போகிறோமோ? இல்லை. நிச்சயமாக இல்லை.

நிதி அமைச்சர் என்ற முறையில் சிறிசேனாவின் தேசத் துரோகம் பற்றி நீங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறீர்கள். அந்தத் துரோகம் இராசபக்சாவின் குடும்ப ஆட்சியை கொல்லைப்புற வழியாக மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டுவந்தது. இதனால் கடனில் மூழ்கியிருக்கும் நாட்டுக்கு – எங்களுக்கு – நாட்டுமக்களுக்கு சட்டத்துக்கு விரோதமான இராசபக்சாவின் அந்தத் முறைதவறாள 51 நாள் ஆட்சி நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடிக்கணக்கான உரூபாய் இழப்பை உண்டாக்கியது. மேலும், நிதி அமைச்சர் என்ற முறையில் சிறிசேனாவின் இரண்டகம் காரணமாக ஏற்பட்ட நிதியிழப்பை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த இழப்பை முடிவில் நாங்கள்தான் – சிறிலங்காவின் மக்கள்தான் – சுமக்க வேண்டும். அதனால் எதிர்காலத்தில் பலவிதமான போர்வையில் விலைவாசி கட்டுக்கடங்காது வானில் பறக்கப் போகிறது. (https://www.colombotelegraph.com/index.php/4th-february-2019-celebrating-71-years-of-what/)

குறிப்பு – கட்டுரையாளர் சார்மினி சேரசிங்கி ஒரு முற்போக்கு ஊடகவியலாளர். Colombo Telegraph என்ற இணைய தளத்தில் அவரது ஆக்கங்கள் பிரசுரமாகின்றன. சிங்களவர்கள் மத்தியிலும் உண்மையை, உண்மையாக எழுதும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையைத் தமிழாக்கம் செய்தவர் நக்கீரன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்