யாழ்.மாநகர சபைக் கட்டடத்தை மீளமைக்க அமைச்சரவை அங்கீகாரம்: யாழ்.மாநகர முதல்வர்

யாழ்.மாநகர சபைக் கட்டடத்தை மீளமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்.மாநகர சபைக் கட்டடத்தை மீளமைப்பதற்காக 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகரசபைக் கட்டடம் 1981 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்த நடவடிக்கைகளில் அழிக்கப்பட்டது. இந்நிலையில், 27 ஆண்டுகளிற்குப் பின்னர், மீண்டும் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

கடந்த காலங்களில் யாழ்.மாநகரசபைக் கட்டடத்தினது புனரமைப்பிற்காக பல முயற்சிகள் முன்னெடுத்திருந்த போதிலும், அது கைகூடவில்லை.

இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அமைச்சின் கீழ், மாநகர சபைக் கட்டடத்தைக் கட்டுவதற்கு 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்து அதற்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ்.மாநகர சபையின் இருப்பில் இருக்கும் 300 மில்லியன் ரூபாயை மீதப்படுத்தி நகரத்தின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே எதிர்காலத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து யாழ்.மாநகர சபையின் சேவைகளை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்” என இம்மானுவேல் ஆர்னோல்ட் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்