நாளை சாவகச்சேரியில் மாபெரும் மக்கள் மனமறியும் அரசியல் கருத்தரங்கு! கருத்துக்களுக்கு தெளிவூட்டுகிறார் சுமன்

தென்மராட்சி கருத்துருவாக்கிகள் குழாம் நடத்தும் ”கற்றோர் கருத்தறிதலும் மூத்தோர் மூதுரையும்” என்னும் தொனிப்பொருளிலான மக்கள் மனமறியும் அரசியல் கருத்தரங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சிவன்கோவிலடி, சாவகச்சேரியில் அமைந்துள்ள தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ளது.

கல்வியியவாளர் சு.சிவானந்தன் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தமர்வில் அகவணக்கம், ஈகச்சுடரேற்றல் என்பவற்றைத் தொடர்ந்து, வரவேற்புரையை சமூகசெயற்பாட்டாளர் கா.சிவஞானசுந்தரம் வழங்குவார்.

இந்த மக்கள் மனமறியும் அரசியல் கருத்தரங்கில், ”அன்றாடப் பிரச்சினைகளும் அடிப்படைப் பிரச்சினையும் அடுத்தது என்ன?” என்ற தொனிப்பொருளில் மக்கள் மனங்களில் ஊசலாடும் கருத்துக்களைக் கருப்பொருளாக்கி சிவில் சமூகப் பிரதிநிதிகளான நல்லை ஆதீன சிவாச்சாரியார் சிவஸ்ரீ து.ஜெகதீஸ்வரக் குருக்கள், சாவகச்சேரி புனித லிகோரியர் ஆலய பங்குத்தந்தை அதிவணக்கத்துக்குரிய அருட்தந்தை றெக்ஸ் சௌந்தரா, யாழ்.பல்கலைக்கழகத் தொழில்நுட்ப பீட  பேராசிரியர் க.கந்தசாமி, வரணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் ப.அச்சுதன், சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி ப.குகனேஸ்வரன் ஆகியோர் வழங்குவர்.

சிவில் சமூகப் பிரதிநிதிகளின் அரசியல் கருத்தாடல் கருத்துக்களுக்குத் தெளிவூட்டும் வகையில் தமிழ் மக்களின் அன்றாட, அடிப்படைப் பிரச்சினை தொடர்பாகவும் புதிய அரசமைப்பு நகர்வுகள் அதில் கூட்டமைப்பின் வகிபாகம் என்பன தொடர்பாக மிகவும் துல்லியமாக விளக்கமளித்து பதிலுரைக்கவிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜளாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்.

தென்மராட்சி கருத்துருவாக்கிகள் குழாம் உறுப்பினர் ந.திலீபனின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெறும்.

அரசியல் ஆர்வலர்கள், அரசியல் தொடர்பில் தெளிவற்று குழப்பமடைந்திருப்பவர்கள் பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரையும் கருத்துருவாக்கற்குழாமினர்’ அழைத்துநிற்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்