கூட்டு ஒப்பந்தத்தினை ரத்து செய் – தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்)

தோட்ட தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்தம் வேண்டாம் எனவும், அடிப்படை சம்பளமாக 700 ரூபாய் வேண்டாம் 1000 ரூபாவே அடிப்படை சம்பளமாக கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க வேறுபாடுகள் இன்றி நடு வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்ததுடன், வேலை நிறுத்தபோராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் 03.02.2019 ஞாயிற்றுகிழமை கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள் கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவினை வழங்க கோரி 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மேற்படி நகரில், “கூட்டு ஒப்பந்தம் வேண்டாம்”, “கூட்டு ஒப்பந்தத்தினை ரத்து செய்” போன்ற பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியதுடன் தாம் மாதாந்தம் தொழிற்சங்கங்களுக்கு வழங்கும் சந்தாப்பணத்தை தற்காலிகமாக நிறுத்தி விடுவோம் என கோஷங்கள் மூலம் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர்.

அத்தோடு, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஷ் தொழிலாளர்களை ஏமாற்றி விட்டதாகவும், அடுத்து வரும் தேர்தல் காலங்களில் வாக்குகளை கேட்டு வரக்கூடாது என இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

தொடர்ச்சியாக தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் கொழும்பு நகரம் மற்றும் யாழ் மக்களும் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி தங்களின் ஆதரவினை வழங்கி வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்