அரசமைப்பு முயற்சியில் நான் தொடர்ந்து ஈடுபடுவேன் நாடாளுமன்ற உறுப்புரிமை அதற்கு அவசியமில்லை! –சுமந்திரன்

புதிய அரசமைப்பு முயற்சி இந்த நாடாளுமன்றக் காலத்தில் நிச்சயம் நிறைவேறும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு கட்சிகளும் இணைந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தால்கூட அடுத்த – புதிய அரசு காலத்தில் அது நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மேலும் அதிகம் காணப்படுகின்றன. அரசமைப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அவசியம் என்றில்லை.

– இவ்வாறு ஆணித்தரமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

வசந்தம் தொலைக்காட்சியில் அதிர்வு நேர்காணலில் கலந்து, புதிய அரசமைப்பு தொடர்பாக விளக்கமளித்திருந்தார். அந்த நோர்காணலில் புதிய அரசமைப்பு நிறைவேறும் என எவருக்குமே நம்பிக்கை இல்லை. அவ்வாறு நிறைவேறாத சந்தர்ப்பத்தில் நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பேன் என்று மிகத் துணிவாக  தெரிவித்திருக்கின்றீர்கள். எந்த அடிப்படையில் அவ்வாறு தெரிவித்தீர்கள்? என்று கேட்டதற்கே மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.

அந்த நேர்காணலில் சுமந்திரன் மேலும் தெரிவித்தவை வருமாறு;-

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தோல்வியடையுமாக இருந்தால் அதற்கான பொறுப்பை நான் ஏற்கத் தயார். ஒக்ரோபர் புரட்சியின்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது எவரும் நீதிமன்றம் போகாவிட்டால் அது தோல்வியடைந்து விட்டது என்று நான் சொல்லமாட்டேன். அதன் அடிப்படையில்தான் சொல்கின்றேன், இந்த முயற்சி தொடர்ந்து நடக்கும் என நம்பிக்கை இருக்கும் வரைக்கும் நான் அதில் ஈடுபடுவேன். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துதான் அதில் ஈடுபடவேண்டும் என்றில்லை. ஆனால், அது நிறைவேற்றுவதற்கு நான் தொடர்ந்தும் ஈடுபடுவேன். மற்றையவர்கள் தேர்தலுக்காகக் கதைக்கப் பயப்படுவார்கள். ஆனால், நான் அவ்வாறானவன் அல்லன்.

புதிய அரசமைப்பு இந்த நாடாளுமன்றக் காலத்தில் நிறைவேற்றுவதற்குப் பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. தற்செயலாக நாடாளுமன்றம் இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து கலைக்கலாம் என்ற நிலைப்பாட்டுக்கு வருமானால்  அது கலைந்துவிடும். அப்படிக் கலைந்தாலும்கூட அடுத்த நாடாளுமன்றத்திலே இதனை நிறைவேற்றுவதற்கான கூடுதல் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஒரேயொரு விடயத்தை மட்டும் நான் இந்த இடத்திலே சுட்டிக் காட்டுகின்றேன்.

2015 ஆம் ஆண்டு மைத்திரி பால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு பொது வேட்பாளராகக் கொண்டுவந்தபோது அவரை நாங்கள் ஆதரிப்பதற்கு எழுத்திலே எந்தவிதமான ஒப்பந்தங்களும் செய்யப்படவில்லை. அரசமைப்பைப் பற்றி எங்களுக்குள்ளே இணக்கப்பாடுதான் இருந்தது. வெளியிலே நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இனி வரப்போகின்ற தருணத்திலே அரசமைப்பு குறித்து வெளிப்படையாகவே பேசக்கூடிய ஒரு சூழ்நிலை நாடு முழுவதும் உருவாகி இருக்கின்றது. அதிலே எங்களுடைய நிலைப்பாட்டைத் தெட்டத் தெளிவாக சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது. அதைப்பற்றி பயந்துகொண்டுழ நான் ஒளிந்து மறைந்து விளையாடவேண்டிய தேவை இல்லை. ஆகையால் கூடுதலான சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று நான் சொல்கின்றேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்