இறுதிப்போரில் தமிழ் மக்களை புலிகளே சுட்டுக்கொன்றார்கள் போர்க்குற்றங்களில் படையினர் ஈடுபடவில்லை என்கிறார் மஹிந்த 

“இறுதிப்போரில் போர்க்குற்றங்களில் படையினர் ஈடுபடவில்லை. பாதுகாப்புத் தேடி இராணுவம் நின்ற பகுதிகளுக்குள் தப்பியோடி வந்த தமிழ் மக்களை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றார்கள்.”
– இப்படி இந்தியாவில் கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச.
இந்தியாவுக்குச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் அங்குள்ள ஊடகவியலாளர்கள் தொடர் கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். அவற்றில் இராணுவத்தினரின் போர்க்குற்றம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கித் தவித்த தமிழ் மக்களை மீட்கும் பணி 2009ஆம் ஆண்டு மே மாதம் 18, 19ஆம் திகதிகளில் நிறைவுக்கு வந்தது.
சர்வதேச போர் விதிமுறைக்களுக்கமையவே நாம் தமிழ் மக்களை மீட்டெடுத்தோம்.
இந்தியா உட்பட பல நாடுகள் தமிழ் மக்களை மீட்டெடுக்கும் மனிதாபிமானப் போருக்கு உதவி புரிந்தன.
வன்னியில் விடுதலைப்புலிகளை நோக்கிப் படையினர் நடத்திய தாக்குதல்களில் அவர்களின் பிடியில் இருந்த சில மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். போர் நடவடிக்கையின்போது இது தவிர்க்க முடியாது.
ஆனால், தமிழ் மக்களை மீட்டெடுக்கும் இந்தப் போரில் போர்க்குற்றங்களில் படையினர் ஈடுபடவில்லை. பாதுகாப்புத் தேடி இராணுவம் நின்ற பகுதிகளுக்குள் தப்பியோடி வந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றார்கள். இதுதான் உண்மை.
உயிர் தப்பி தற்போது வாழும் அந்தப் பகுதி மக்களிடம் இப்போதும் கேட்டுப் பாருங்கள் – அவர்கள் அப்போது நடந்த உண்மையைச் சொல்வார்கள். விடுதலைப்புலிகள் தங்களை எப்படிக் கேவலமாக நடத்தினார்கள் என்பதை அவர்கள் கூறுவார்கள்.
வீடுகளுக்குள் புகுந்து சிறுவர், சிறுமிகளைப் பிடித்து வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்த்தார்கள் புலிகள்; தமது சொல்லைக் கேட்காத போராளிகளைச் சுட்டுக்கொன்றார்கள்; சிலரைக் காணாமல் ஆக்கினார்கள்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்