மாகந்துர மதுஷ் தொடர்பான விசாரணைகள் நிறைவு! – அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

டுபாயில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவருமான மாகந்துர மதுஷ் உள்ளிட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன.

எனினும், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான திகதி தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மதுஷ்-உடன் கைதான பிரபல பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது மகன் நதீமால் பெரேரா ஆகியோர் தொடர்பாக இன்றைய தினம் முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

அவர்களை நாடுகடத்துவதா அல்லது டுபாய் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதா என்பது தொடர்பாக டுபாய் பொலிஸாரிடம் விளக்கம் கோரவுள்ளதாக, இவ்வழக்கிற்காக டுபாய் சென்றுள்ள இலங்கை சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேர் கடந்த 4ஆம் திகதி டுபாயில் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் பல சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் பல குற்றச்சம்பவங்களில் காணப்பட்ட முடிச்சுகள் அவிழ்க்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கை சட்ட நடைமுறைகளில் காணப்படும் தாமதங்கள் காரணமாக மதுஷ் பிணையில் விடுவிக்கப்படலாம் என்றும், ஆகவே டுபாய் சட்டத்தின் கீழ் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சட்டமா அதிபர் திணைக்கள உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அண்மையில் த சிலோன் டுடே பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்