தேசிய இந்து மகாசபை, இந்து அறிவோர் சபை ஆகிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும்

இந்து மத நடவடிக்கைளை தேசிய, மாவட்ட மட்டங்களில் கூட்டிணைக்கும் நோக்கில் ‘இலங்கை தேசிய இந்து மகாசபை’ என்ற பொறிமுறை உருவாக்கப்படும். இது ஆங்கிலத்தில் ‘நேஷனல் ஹிந்து கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா’ என்று அழைக்கப்படும். இதற்குள் ஒரு தேசிய வழிநடத்தல் குழு அமைக்கப்படும். அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இலங்கை தேசிய இந்து மகாசபையின் மாவட்ட குழுக்கள் அமைக்கப்படும். இதைத்தவிர மத விவகாரங்கள் தொடர்பில் அமைச்சருக்கு ஆலோசனைகள் வழங்க இந்து அறிவோர் சபை என்ற பொறிமுறையும் உருவாக்கப்படும். இந்து மதகுருமார்கள், இந்து ஆலய அறங்காவலர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், இந்து சைவ மத மன்றங்கள்-இளையோர் சங்கங்கள் என்ற நான்கு தூண்களை கொண்டு எனது பணிகளை இந்து சமய விவகார அமைச்சர் என்ற முறையில் நான் முன்னெடுப்பேன் என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சில் நடைபெற்ற அதிகாரிகள்-பொது மக்கள் சந்திப்பின் போது அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,

என் ஏனைய அமைச்சு பணிகளுடன் சேர்ந்து மேலதிகமாக இந்து சமய விவகாரமும் இப்போது புதிதாக என்னிடம் வந்துள்ளது. இந்த அமைச்சு விவகாரத்தை இதற்கு முன் தலைமை தாங்கி நடத்திய நண்பர் சுவாமிநாதன் மிக சிறப்பாக தன் பணியை அவரது பாணியில் செய்திருந்தார். அவருக்கு என் பாராட்டுகள். வேலைப்பளு காரணமாக அவரது கவனத்தை கவரத்தவறிய விடயங்களை, நான் எனது பாணியில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளேன்.

முதலில் இந்து துறையில் ஒரு அடிப்படை கட்டமைப்பு மாற்றத்தை கொண்டு வந்து, ஏனைய சகோதர மத கட்டமைப்புகளை போன்று, தேசியரீதியாக இந்து சமய கட்டமைப்பையும் ஏற்படுத்த நான் முடிவு செய்துள்ளேன். இந்து மதம் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் பல சவால்களை இன்று சந்திக்கின்றது. இந்து  கடவுளர்களை ஏனைய மத சகோதரர்கள் வணங்கி அருள் பெறுவது நல்ல விடயம். ஆனால், அதை வைத்துக்கொண்டு எங்கள் கடவுளர்களையும், ஆலயங்களையும், ஆலய காணிகளையும் ஆக்கிரமித்து திருட முனைவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவற்றை நிறுத்தி வெற்றிக்கொள்ள வேண்டும்.

எமது மத குருமார்களுக்கு அவர்களது தகைமைகளுக்கு ஏற்ப தேசியரீதியாக அங்கீகாரமும், இந்து குருமார் என்ற தேசியரீதியான பொது அடையாளமும் வேண்டும். இந்து பாமர மக்கள் ஏழ்மை, வறுமை காரணமாக மதம் மாறுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அறநெறி  கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த மத வளர்ச்சியில் ஆலய அறங்காவலர்களின் பங்களிப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். இந்து பொது அமைப்புகள் மற்றும் இளையோர் சங்கங்கள் ஒழுங்கமைக்கப்பட்டு, மத வளர்ச்சியிலும், பாதுகாப்பிலும் அவற்றின் பங்களிப்புகளுக்கு உரிய சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும்.

இந்து மதகுருமார்கள், இந்து ஆலய அறங்காவலர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், இந்து சைவ மத மன்றங்கள்-இளையோர் சங்கங்கள் ஆகிய நான்கு தூண்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். இந்த தூண்களை கொண்டு அமைச்சு அரச அதிகாரத்தை பயன்படுத்தி, இவற்றை நான் செய்வேன். இந்த அமைச்சு என்னிடம் இருக்கும்வரை இந்த நோக்கங்களை அடைய நான் அயராது உழைப்பேன். இவை தொடர்பில் எவரும் என்னிடம் விளையாட முடியாது. இவற்றுக்கான ஒத்துழைப்புகளை அனைவரும் எனக்கு வழங்க வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்