இனவாதிகளுக்கு ஏற்றாற்போல் உருவாக்கப்படாது அரசமைப்பு – அடித்துக் கூறுகின்றார் அமைச்சர் ரவி

“இனவாதிகளின் கருத்துக்கு ஏற்றவாறு அரசமைப்பை உருவாக்க முடியாது” என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்க மேல் மகாண ஆளுநர் அஸாத் ஸாலியை நேற்று அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசமைப்பு ஓர் இனத்துக்காகவோ, ஒரு மதத்துக்காகவோ தயாரிக்கப்படமாட்டாது. தற்போது நாட்டுக்குப் புதிய அரசமைப்பொன்று அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இதனை நாம் பலவந்தமாகக் கொண்டுவர முடியாது.

அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன், அவர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலேயே அது அமையப் பெறவேண்டும்.

எவ்வாறாயினும் ஒற்றையாட்சி, பௌத்தத்துக்கு முன்னுரிமையுடன்தான் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும். இதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

இனவாதிகள்தான் இது தொடர்பில் பொய்யான கருத்துக்களை கூறிவருகின்றார்கள். இவ்வாறான ஒரு அரசமைப்பு ஓர் இனத்துக்கோ, மதத்துக்கோ அல்லது கட்சிக்கோ மட்டும் மட்டுப்பட்டதாக இருக்காது.

இலங்கையர் எனும் அடிப்படையில்தான் இந்த அரசமைப்பு உருவாக்கப்படும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இந்தப் பிரச்சினையை நாம் வெகுவிரைவில் தீர்ப்போம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்