கோயில்கள் அமைத்து நிலத்தை பிடிப்பவர்கள் அல்ல தமிழர்கள்! – அமைச்சர் மனோ அதிரடி

“தமிழர்கள் பிற மதத்தவர்கள் போன்று இந்து மக்கள் வாழாத இடங்களில் கோயில்களை அமைத்து நாட்டையும் நிலத்தையும் பிடிப்பதில்லை.”

– இவ்வாறு தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மற்றும் சமூகமேம்பாடு, இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் ஒரு அரசியல் விபத்து ஏற்பட்டது. எங்களது அரசைச் சில தரப்பினர் திருட முற்பட்டனர். அந்தக் கும்பலை மக்களின் பலம் மற்றும் சட்டத்தின் பலத்துடன் நாங்கள் விரட்டி அடித்துள்ளோம்.

அதனால் எமது அமைச்சு மூலம் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்களில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறான விடயங்கள் சில நன்மைகளைத் தந்துள்ளன.

நாரதர் கலகம் நல்லதில் முடியும் என்பது போன்று அந்த விபத்தால் அமைச்சரவை மாற்றப்பட்டு எனக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் வரவு – செலவுத்திட்டத்துக்குப் பின்னர் வேறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

கடந்த மூன்று காலாண்டுகளுக்கு மூன்று கோடி ரூபாவும் அடுத்த காலாண்டுகளுக்காக 09 கோடி ரூபாவும் இந்து விவகாரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தைப்போன்று இந்து சமய விவகார அமைச்சு என்பது ஒரு உறங்கும் அமைச்சாக இருக்காது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்