புதிய அரசமைப்பு உருவாக்கம் இப்போதைக்கு சாத்தியமில்லை கைவிரித்தார் பிரதமர் ரணில் 

“ஒரு கட்சியை மையப்படுத்திய பலமான அரசு அமைக்கப்படுவதன் மூலமே புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளை முன்னெடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “உறுதியான அரசை உருவாக்கும் தேர்தல் முறைமையை ஏற்படுத்துவதே நாட்டின் தற்போதைய தேவைப்பாடாக உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த கூட்டு அரசின் காலத்தில் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி சூழ்ச்சியுடன் கூட்டு அரசு முறிவடைந்தத. அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல சிறுகட்சிகளின் தயவில் ஆட்சி அமைத்துள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.
“கூட்டாட்சி (சமஷ்டி) தொடர்பில் அன்று பிரச்சினை இருந்தது. இன்று தேர்தல் முறைமை தொடர்பில்தான் பிரச்சினை உள்ளது. தேர்தல் முறைமை இறுதி செய்யப்பட வேண்டும். அதுவரையில் புதிய அரசமைப்புக்கான சட்டவரைவையோ அல்லது சட்டத்தையோ நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரமுடியாது.
ஏனென்றால் ஒரு கட்சியை மையப்படுத்திய அரசு அமையாத வரையில் இந்த விடயத்தைச் செய்யமுடியாது. சிறுகட்சிகளுடன் தொடர்ந்து அரசைக் கொண்டு நடத்த முடியாது. ஆகவே, உறுதியா அரசை அமைக்கும் தேர்தல் முறைமையை உருவாக்க வேண்டும். அதன் பின்னரே புதிய அரசமைப்புப் பற்றிச் சிந்திக்க முடியும் என்பதே யதார்த்தமானதாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தேர்தல்கள் முறைமை தொடர்பில் தற்போது அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. பிரதான கட்சிகள் ஒருநிலைப்பாட்டிலும், சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் பிறிதொரு நிலைப்பாட்டிலும் உள்ளன. பிரதான கட்சிகள் விகிதாரச தேர்தல் முறையைக் கோரி நிற்கின்றன.
ஒரு கட்சிக்கு அதிகளவு உறுப்பினர்கள் கிடைப்பார்களாயின் அந்தக் கட்சி அரசை அமைத்துக்கொள்ளக் கூடிய வகையில் அமைய வேண்டும் என்று கருதுகின்றன. அவ்வாறாயின் அதற்கு ஏற்றால் போன்று விகிதாசார தேர்தல் முறைமையில் திருத்தங்களை செய்து தயார்ப்படுத்த வேண்டும்.
ஆனால், சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் அந்த தேர்தல் முறைமை நடைமுறையாகுமாக இருந்தால் தமது பிரதிநிதித்துவங்கள் குறைவடைந்து விடும் என்று எதிர்ப்புக்களை தெரிவிப்பதுடன் தமது பிரதிநிதித்துவங்கள் குறையாத வகையில் முழுமையான விகிதாசார தேர்தல் முறையொன்றை அமைக்க வேண்டும் என்று கோருகின்றன.
பிரதான கட்சிகளும், வடக்கின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நிலையான பிரதமரைத் தெரிவு செய்யக்கூடிய வகையில் தேர்தல் முறைமை அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம். அவ்வாறான தேர்தல் முறைமை இல்லாது போனால் மின்னுயர்த்தியில் உறுப்பினர்கள் சிக்கிக்கொண்ட நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பிரதமர் மாறிவிடுவார். ஆகவே, அத்தகையதொரு தேர்தல் முறைமை அவசியமாகின்றது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்